.(விஜயரெத்தினம்)

யுத்த காலத்தில் மாணவர்கள் சித்தியடையும் வீதம் 75 வீதத்திற்கு மேல் இருந்தது.ஆனால் இன்று மாணவர்கள் சித்தியடையும் வீதம் 38 வீதத்திற்கு குறைவடைந்து கொண்டிருக்கின்றது என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு கல்வி கலை பண்பாடுகள் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் "தரம் 5 மாணவர்களின் அடைவுமட்டத்தினை அதிகரிக்கும் செயற்திட்டமும்,அதற்கான பகுப்பாய்வு அறிக்கை வெளியிடலும்" நிகழ்வு சனிக்கிழமை(28.09.2019) காலை 9.00 மணிக்கு நொச்சிமுனையில் அமைந்துள்ள கல்வி அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் கல்வி,கலை, பண்பாடுகள் மற்றும் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் கல்விக் குழுப் பொறுப்பாளர் திருமதி. திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன்,மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன்,
ஒன்றித்தின் தலைவர் எஸ்.தேவசிங்கன்,உபதலைவர் எஸ்.சந்திரகுமார்,மாநகர சபை அங்கத்தவர்கள், தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணித் தலைவர், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றார்கள்,மாணவர்கள் கலந்துகொண்டனர்.


மட்டக்களப்பு மாநகர முதல்வர் மேலும் தெரிவிக்கையில் ..
விவேகானந்தர் சொல்வது போன்று ஒரு சமூகத்தின் முன்னேற்றம், ஒரு தேசத்தின் முன்னேற்றம் கல்வியிலேயே தங்கியுள்ளது.இதனை கருத்தில் கொண்டே இவ் அமைப்பு 2015 ஒரு சிறிய நிதியினைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு பல தடைகளைத் தாண்டி இன்றுவரை கல்விக்காக சேவை செய்து கொண்டிருக்கின்றது.யுத்த காலத்தில் மாணவர்கள் சித்தியடையும் வீதம் 75 வீதத்திற்கு மேல் இருந்தது.ஆனால் இன்று மாணவர்கள் சித்தியடையும் வீதம் 38 வீதத்திற்கு குறைவடைந்து கொண்டிருக்கின்றது.
இதனால் எதிர்காலத்தில் அதிகமான தமிழ்மாணவர்கள் உயர் கல்வி அல்லது உயர் பதவிகளை பெறாது கூலித் தொழிலுக்கு போக வேண்டிய அபாய நிலை உருவாகும். தற்கால ஆய்வில் கூட பார்த்தால் எமது மட்டக்களப்பு மாவட்டம் கல்வியில் 24 ஆவதாக கடைசிக்கு முதல் மாவட்டமாக பின்தங்கி இருக்கின்றது.இந் நிலை மாற வேண்டுமானால் நாம் அனைவரும் தமிழ் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும்.ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும்.பெற்றோர்கள் தம்பிள்ளைகளை மேற்பார்வை செய்து ஒழுக்கத்துடன் கல்வியை ஊட்ட வேண்டும்.
பிள்ளைகளின் உரிமை அவர்களுக்கான முன்னேற்றம் பெற்றார்கள், ஆசிரியர்கள் கைகளிலேயே உள்ளது. அதனை அவர்கள் ஒழுங்காக வழங்க வேண்டும். எமது மாநகர சபையின் வாயிலாக சிறுவர்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். இந்த சிறார்களின் பூரணமான கல்வி அறிதலே நாளை அவர்களை மேற்கொண்டு உயர்கல்விகளைப் படிப்பதற்கு வழிவகுக்கின்றது. அதன் காரணமாகவே எங்களது ஒன்றியமானது 5 ஆம் தர மாணவர்களுக்கு இச் செயற்பாட்டினை மேற்கொள்கின்றது என தனது உரையில் தெரிவித்தார்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours