(எம்.ஏ.றமீஸ்)
கல்முனைப் பிராந்தியத்தில் தற்போது எல்லை மீறிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இந்நோய்த் தொற்றுப் பரவலானது ஒரு தினத்தில் மாத்திரம் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் பரவியிருப்பதுடன் இரு மரணங்களும் இப்பிராந்தியத்தில் நிகழ்ந்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் மக்கள் செயற்படுவதனாலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
எமது சுகாதாரத் தரப்பினர் தமது சேவை நிமித்தம் பிரதான வீதி வழியாக பயணிக்கும் போது சுமார் ஒரு கிலோமீற்றர் குறுகிய தொலைவில் முகக்கவசம் அணியாமல் நூற்றுக்கு மேற்பட்டவர்களை நாம் அவதானித்தோம்.
இந்நிலைமை இவ்வாறிருந்தால் எமது பிராந்தியத்தில் கொவிட் தொற்றின் பரம்பல்; எல்லை மீறிச் செல்வதை யாராலும் தடுத்து விட முடியாது. சுகாதார நடைமுறைகளை மக்கள் உண்மைக்குண்மையாக மனதால் ஏற்று செயற்படாமலிருந்தால் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையினை நாம் கட்டுப்படுத்த முடியாமலேயே போய்விடும்.
இப்பிராந்தியத்தில் இனிவரும் காலங்களில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளோம். மக்கள் ஒன்று கூடுவதை முற்று முழுதாக தவிர்க்க வேண்டும். மைதானங்களில் மாலை வேளைகளில் இளம் பராயத்தினர் ஒன்று கூடி விளையாடி வருவதை தவிர்க்க வேண்டும். இல்லையேல் கொவிட் தொற்று நம் வாழ்வில் விளையாட ஆரம்பித்து விடும். மதஸ்தலங்கள், பொதுச் சந்தைகள் போன்றவற்றில் கண்டிப்பான சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டியுள்ளது இதனைக் கண்காணிப்பதற்கான விஷேட ஏற்பாடுகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம்.
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை எல்லைக்குட்பட்;ட 13 பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இதுவரை 96 மரணம் நிகழ்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தினுள் 106 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இப்பிராந்தியத்தில் அக்கரைப்பற்று மற்றும் காரைதீவு ஆகிய பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தினுள் இரு மரணங்களும் பதிவாகியுள்ளதுடன், இப்பிராந்தியத்தில் 4596 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 24 தொற்றாளர்களும், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 கொவிட் தொற்றாளர்களும், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 17 தொற்றாளர்களும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளனர்.
நாவிதன்வெளி பிரதேசத்தில் 12 தொற்றாளர்களும், அட்டாளைச்சேனை மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் தலா ஆறு தொற்றாளர்களும், திருக்கோவில் பிரதேசத்தில் ஐந்து தொற்றாளர்களும், காரைதீவு, சம்மாந்துறை மற்றும் சாய்ந்தமருது ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா நால்வரும், அக்கரைப்பற்று பிரதேசத்தில் மூவரும், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரு தொற்றாளர்களும் இறக்காமம் பிரதேசத்தல் ஒரு கொவிட் தொற்றாளரும் கடந்த 24 மணி நேரத்தினுள் பதிவாகியுள்ளனர் எனவும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் மேலும் தெரிவித்தார்.

Post A Comment:
0 comments so far,add yours