(ரணா)
                    
முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டு நின்றால் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவின் ஜனாதிபதி தேர்தல் வியூகம் வெற்றி பெறும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், சுகாதார மற்றும் போசாக்கு துறை முன்னாள் இராஜாங்க அமைைச்சருமான எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.

முஸ்லிம்களின் பொது வேட்பாளராக ஹிஸ்புல்லா வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஹசன் அலி, பஷீர் சேகு தாவூத் ஆகியோரின் கருத்துகளை கேட்டறிந்தார். இது தொடர்பாக நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது ஹசன் அலி மேலும் தெரிவித்தவை வருமாறு

ஹிஸ்புல்லாவின் வியூகம் சரியானது. சமய தலைவர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், அரசியல், சமூக, பொதுநல செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆசிர்வாதம், ஆலோசனை ஆகியவற்றை பெற்று கொண்டே வியூகத்தை வகுத்து இருக்கின்றார். முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டு நின்றால் இந்த வியூகம் வெற்றி பெறும். மிக பொருத்தமான சக வேட்பாளரை சரியாக அடையாளம் கண் இரண்டாவது விருப்ப தெரிவு வாக்குகளை முஸ்லிம் சமூகம் மொத்தமாக வழங்க வேண்டும்

ஆனால் இவ்வியூகத்துக்கு சக்தி கொடுப்பதற்கு முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு நிற்குமா? என்பதே முன்னால் உள்ள பிரதான கேள்வி ஆகும். தேசிய ரீதியாக அரசியலில் முஸ்லிம்களின் ஒற்றுமை சாத்தியப்படுவதற்கு இல்லை என்பதையே முஸ்லிம் அமைச்சர்களின் அண்மைய இராஜினாமா நாடகம் தெளிவாக காட்டி உள்ளது. கல்முனை பாராளுமன்ற உறுப்பினரை தவிர்த்து ஏனைய எல்லோரும் மீண்டும் பதவிகளை எடுத்து கொண்டனர். மற்றவர்கள் கேட்டு கொண்டதன் பெயரில் முன்னர் தலைவரும், தலைவர் கேட்டு கொண்டதன் பெயரில் பின்னர் மற்றவர்களும் பதவி ஏற்று கொண்டதாக ஒரு கட்சியினர் தெரிவித்து உள்ளனர். ஆக மக்களுக்காக தலைவரும் சரி, மற்றவர்களும் சரி பதவி ஏற்கவில்லை என்பது விளங்குகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் களம் வேறு. முஸ்லிகள் அடங்கலாக நாட்டு மக்கள் அப்போதைய பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு திரண்டு வாக்களித்தனர். அதற்கு பல காரணங்கள் இருந்தன. வரவுள்ள தேர்தல்களை பொறுத்த வரை முஸ்லிம் மக்களை அரசியமயப்படுத்துவதில் வெற்றி காண வேண்டி உள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours