(காரைதீவு நிருபர்சகா)
காரைதீவு ஊர்ப்பகுதிக்குள் நுழைந்த போக்குவரத்துப்பொலிசாருடன் சற்று முறுகல்நிலை ஏற்பட்டது.
இச்சம்பவம் நேற்று(22) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
அதன்போது பொதுமக்களுக்கும் பொலிசாருக்குமிடையே சிறுமுறுகல் நிலை ஏற்பட்டது.அச்சமயம் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் காரைதீவு பிரதேசசெயலகமும் இணைந்து நடாத்திய அறநெறி பெருவிழா எழுச்சி ஊர்வலமும் அப்பகுதியால் வந்தது.
பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் ஊடகவியலாளர் விரி.சகாதேவராஜா உள்ளிட்ட அதிதிகளும் அவ்வூர்வலத்தில் பங்கேற்றனர்.
சபைத்தவிசாளர் ஜெயசிறில் ஊர்வலத்தின்பின்னால் இன்னொருவரின் மோட்டார்சைக்கிளில் வந்தபோது நிறுத்தி தலைக்கவசம் வினாவப்பட்டது.
பதிலுக்கு தவிசாளர் ஜெயசிறில் இவ்வாறு கூறினார்.
எமது உள்ளுர் பகுதியில் அதுவும் மத வழிபாட்டுஊர்வலத்தில் இவ்வாறு இடைஞ்சல்செய்கிறீர்களே இது மனிதாபிமானமா? மதுஅருந்திவருபவர்களை கைதுசெய்யுங்கள் தண்டியுங்கள். அது உங்களது அரசகடமை.ஆனால் இது ஊருக்குள் மதஊர்வலத்தில் வருவோரையும் இவ்வாறு செய்யமுனைவது கண்டிக்கத்தக்கது. நாம் பொலிஸ்மாஅதிபர் இந்துகலாசசார அலுவல்கள் அமைச்சர் மனோகணேசனிடமும் தெரியப்படுத்துவோம். என்று கடுமையானதொனியில்; வாதத்தில் ஈடுபட்டார்.
போக்குவரத்துப்பொலிசாரும் தம்பக்க நியாயங்களைக்கூறினர். அதன்போது ஊர் இளைஞர்கள் திரண்டுவிட்டார்கள். நிலைமை பதட்டமாகவிருந்தது.
தமிழர்பிரதேசத்தில் மட்டும்தான் இந்த அடாவடித்தனத்தைச்செய்கிறீர்கள்? ஏனைய பகுதிக்குள் செல்வதேயில்லை. ஏனிந்த அராஜகம்? என்று அங்கிருந்தோர் கேள்வியெழுப்பினர்.
இந்தநிலையில் நாம் பொலிசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யவேண்டிநேரிடும் என்று எச்சரித்தார் தவிசாளர்.
பின்பு ஒருவாறு சமரசமாகியதும் இருசாராரும் கலைந்துசென்றனர்.
அண்மையில் காரைதீவு பிரதேசசபை அமர்வில் இதுதொடர்பான தீர்மானமொன்றும் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Post A Comment:
0 comments so far,add yours