(-க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பில் 11522 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு மாவட்டத்தில் உள்ள கல்குடா,மட்டக்களப்பு ,பட்டிருப்பு ஆகிய மூன்று தொகுதிகளிலிருந்தும் 11983 பேர் விண்ணப்பித்தவர்களில் 11522 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும்,இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் 461 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ...

ஜனாதிபதி தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 31 ஆந் திகதியும்,நவம்பர் 01 ஆந் திகதியும் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.அதன் அடிப்படை தேர்தல் சட்ட ஒழுங்குகளை  பின்பற்றி நடத்தப்படவுள்ளது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் 428 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் 27 சாதாரண வாக்கெண்ணும் நிலையங்களும்,7 தபால் மூல  வாக்கெண்ணும் நிலையங்களுமாக 34 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.தேர்தல் கணக்கெடுக்கும் நிலையமாக வழமையாக பயன்படுத்தப்படும் மட்டக்களப்பு  இந்துக்கல்லூரி தான் இம்முறையும் பயன்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை(18) 21 அஞ்சல் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குச்சீட்டு அடங்கிய ஆவணங்கள் ஒப்படைக்கப்படவுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக 428 சிரேஸ்ட தலைமை தாங்கும் உத்தியோகஸ்தர்களும்,4991 அரசாங்க  உத்தியோகஸ்தர்களும் தேர்தல் கடமையையில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள்.

கல்குடா,மட்டக்களப்பு,பட்டிருப்பு,ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளுக்குமாக மொத்தம் 398301 வாக்காளர்கள் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிக்கவுள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours