(எம்.ஏ.றமீஸ்)  
இந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் நமது மக்களின் பணத்தின் மூலமாக இன்றுவரை நிருவகிக்கப்பட்டு வருகின்றார்கள். அந்நிலைமை மாற்றமப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களுகாக வழங்கப்படும் வாகன அனுமதிப்பத்திரம் நிறுத்தப்பட வேண்டும். அத்தோடு நாட்டு மக்களின் பணம் குறிப்பிட்ட சாராரால் வீண் விரயம் செய்யப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் அதற்காக இந்நாட்டு மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது எமக்கான ஆணையினை வழங்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவினை ஆதரித்து அக்கரைப்பற்றில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று(24) அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இக்கருத்தினைத் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளர் எம்.ஐ.அபூசஹீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், நாட்டின் நிருவாகத்தில் இருப்பவர்கள் எந்தவொரு விடயத்தின்பாலும் வீண் விரயம் செய்பவர்களாக இருந்தால் அவர்களால் ஒருபோதும் நாட்டினைக் கட்டியெழுப்பவே முடியாது. இவ்வாறானவர்கள் மத்தியில் காணப்படும் வீண் விரயத்தினையும், ஊழல் மோசடிகள் போன்ற தீய நடவடிக்கைகளை நாம் ஆட்சி பீடம் ஏறியவுடன் முடிவுக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.

நமது மக்களின் பணத்தினைக் கொண்டு இந்நாட்டில் ஆட்சியில் இருந்த முன்னாள் ஜனாதிபதிகள் இன்றுவரை நிருவகிக்கப்படுகின்றார்கள். அவ்வாறான நிலைமை முற்றுப் பெற வேண்டும். எமது இந்த நிலைப்பாட்டினை தற்போது என்னோடு போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாசாவிடமும் கோத்தாபாய ராஜபக்ஷவிடமும் வினவிப்பாருங்கள். அவர்கள் இவ்விடயத்திற்கு ஆதரவு வழங்க மாட்டார்கள். ஏனெனில் சஜித் பிரேமதாசாவினது குடும்பமும், கோத்தாபாய ராஜபக்ஷவின் குடும்பமும் இன்று வரை அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவித்து வருவதால் அவர்கள் எமது இக்கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள்.

மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் ஓய்வூதியத்தினை நிறுத்துவதற்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் வாகன அனுபதிப்பத்திரத்திரத்தினையும் நிறுத்துவதற்காக உத்தேசித்துள்ளோம். இவ்வாறான நல்ல பல காரியங்களை மேற்கொள்வதற்காக மக்கள் தமது அங்கீகாரத்தினை எமக்கு தாரவேண்டும்.

ஜனாதிபதிகளுக்காக நாட்டில் முக்கிய பல இடங்களில் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள உல்லாச விடுதிகளையும் அவர்களுக்கான உல்லாச மாளிகைகளையும் அவர்களிடமிருந்து பெற்று நாட்டின் உல்லாசத்துறைக்கு அவற்றை வருமானம் மீட்டும் வகையில் மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளோம்.

அரச சொத்துக்களை சலுகையிலும் ஊழல் மோசடிகளிலும்; தம் வசம் வைத்திருக்கும் அரசில்வாதிகளுக்கு இரண்டு மாத காலக் கேடு வழங்கி அவர்களிடமுள்ள அனைத்து சொத்துக்கள் நிதிகள் போன்றவற்றை அரசாங்கத்திடம் மீளப் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளேன். அவ்வாறு அவ்வாறு அவர்களால் அவை திருப்பிச் செலுத்தப்படாமல் போகுமிடத்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு எண்ணியுள்ளோம்.

இக்காலகட்டத்தில் மிக முக்கியமாக பேசப்படும் விடயங்களுள் மக்கள் பாதுகாப்பும் தேசத்தின் பாதுகாப்பும் மிக முக்கியத்துவம் பெறுகின்றது. இராணுவத்தளபதியினை மாற்றுகின்றபோது தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தி விட முடியும் என சிலர் நினைக்கின்றார்கள். எமது நாட்டில் உள்ள பாதுகாப்பில் இருக்கின்ற அச்சுறுத்தல் என்ன? என்று நாம் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். எம்மத்தியில் உள்ள முரண்பாடுகளே பிரச்சினைகள் எழுவதற்கு பிரதான காரணமாக அமைவதை எல்லோரும் உணர்வதில்லை. 

குறிப்பிட்ட ஒரு குழுவினரால் ஒரு சமூகதில் இருந்து இன்னோர் சமூகத்தினை தாக்குவதற்காக கட்டவிழ்த்து விடப்படுகின்ற செயற்பாட்டின் மூலம் எம்மத்தியில் பிரச்சினைகளும் முரண்பாடுகளும் தோற்றுவதற்கு காரணமாக அமைகின்றது. இது இராணுவத்தினால் தீர்க்கப்பட வேண்டிய விடயமல்ல. இது அரசியலால் தீர்க்கப்பட வேண்டிய விடயமாகும். இவ்வாறான பிரச்சினைகளை நாட்டில் இருந்து இல்லாதொழிக்கும் மிக முக்கியமான செயற்பாட்டினை நாம் கையில் எடுத்துள்ளோம்.

இந்நாட்டில் உள்ள எந்தவொரு இனத்தின் உள்ளிருந்தும் தீவரவாத இயக்கம் உருவாவதற்கும் தீவிரவாத செயற்பாடு மேலெழுவதற்கும் நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்பதனை மக்கள் மத்தியில் பகிரங்கமாக அத்தாட்சிப்படுத்துகின்றோம்.

இந்நாட்டின் தேசிய ஐக்கியத்திற்கு பாரிய சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் உள்ள தீவிரவாதத்தினை பூண்டோடு அழித்து நாட்டின் நிலையான சமாதானத்திற்கும் ஐக்கியத்திற்கும் நாட்டின் தேசிய பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும் நாம் எண்ணியுள்ளோம். இனவாதிகளால் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி விட முடியாது. எம்மிடம் இனவாதம் இல்லை அதனால் இவ்வாறான விடயங்களை களைந்து எமது நாட்டினை சுபீட்சம் மக்க தேசமாக மாற்றியமைக்க முடியும் என்றார்.

எமது தேர்தல் மேடைகளையும் கோத்தாபாய ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரின் தேர்தல் மேடைகளையும் அவதானித்தால் நன்கு புரியும் யாருடைய மேடைகள் இனவாதிகளால் நிறைந்து வழிகின்றது என்னும் விடயம்.

இந்நாட்டில் உள்ள தமிழ் சிங்க முஸ்லிம் கிருஸ்தவ மக்கள் மத்தியில் வீண் பிரச்சினைகளையும் வீண் குரோதத்தனத்தினையும், எதிர்ப்பினையும் சந்தேகத்தினையும் அதிகரிக்கச் செய்யவே அவர்களால் முடியும். அவர்களால் இந்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி மக்களை நிம்மதியாக வாழச் செய்ய முடியாது. ஆனால் எம்மால் நாட்டில் இன ஐக்கியத்தினைக் கட்டியெழுப்பி சமாதான தேசமாக இலங்கையினை மாற்றியமைக்க முடியும்.

எமது எதிர்கால சந்ததியினரின் சுபீட்சமான வாழ்விற்கு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒற்றுமைப்பட வேண்டிய தருணத்தில் உள்ளோம். கடந்த காலத்தில் சஜித் பிரேமதாசா அங்கம் வகிக்கும் அரசாங்கத்தினாலும், கோத்தாபாய ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆட்சியினாலும் எம்மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. மக்களையும் மத நிறுவனங்களையும் பாதுகாக்க முடியாது போன அவ்வாறானவர்களுக்கு மக்கள் மீண்டும் மீண்டும் ஆணையினை வழங்காமல் எம்மைப்போன்ற புதியவர்களுக்கு ஆணையினை வழங்கி நாட்டின் நற்பெயருக்கும் அனைத்து இன மக்களின் பாதுகாப்புடனான நிம்மதிக்கும் களம் அமைப்பதற்கு இனியொருபோதும் நமது மக்கள் பின்னிற்காமல் செயலில் இறங்க வேண்டியுள்ளது.

இந்த நாட்டில் உள்ள எந்தவொரு மதத்தவர்களின் கலாசாரத்தில் இன்னுமொரு சாரார் வேண்டுமென்று கை வைக்க முடியாது. இந்த நாட்டில் உள்ள அனைத்து இனத்தவர்ளும் ஒன்றுபட்டு இன்னொருவரது மதத்தினையும் மதத்தினையும் கலாசாரத்தினையும் மதித்து நடக்ககூடிய நிலைமையினை இந்நாட்டில் கட்டியெழுப்பப் பட வேண்டும்.

இந்நாட்டில் உள்ள சில ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் நண்பர்களாக எதிர் எதிர்த் தரப்புகளில் இருந்து கொண்டு செயற்படுகின்றார்கள். ஒருவர் புரிகின்ற ஊழல் மோசடிகள் போன்ற விடயங்களை மறைக்கும் செயற்பாடுகளிலும் ஊழல்பேர்வழிகளை பாதுகாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

தற்போது ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடும் சஜித் பிரேமதாசாவும் கோத்தாபாய ராஜபக்ஷவும் மிக நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். அரசியல் ரதீயாகவும் ஆட்சியில் ரீதியாகவும் எதிர்த்தரப்புக்களில் உள்ள இவர்கள் இதுவரை எந்தவொரு மேடையிலும் ஒருவரின் பெயரை இன்னொருவர் உச்சரித்ததே இல்லை. பாராளுமன்றத்தில்கூட இவர்கள் ஒருவரைப் பற்றி இன்னொருவர் வாய் திறந்ததே இல்லை.

சஜித் பிரேமதாசாவும் நானும் பாராளுமன்றத்திற்கு ஒரு காலகட்டத்தில் பிரவேசித்தவர்கள். சுமார் பத்தொன்பதுவருடகாலமாகநாம் இருவரும் பாராளுமன்ற அங்கத்துவத்தினைக் கொண்டுள்ளோம். ஆனால் இவ்விருவரும் 19 வருட காலப்பகுதியில் மக்களுக்கு எவ்வளவோ பிரச்சினைகள் எழுந்தபோதிலும் ஒருவரை ஒருவர் பாராளுமன்றத்தில் ஒரு வார்த்தையேனும் பேசியதே கிடையாது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரின் திருமண வீட்டிற்கு பிரதம விருந்தினராக எதிர்கட்சிக்காரரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே பிரதம அதிதியாகச் செல்கின்றார். இவர்களுக்குள் பாரிய நட்பு உள்ளது. ஒருவர் புரிகின்ற ஊழல் மோசடிகளை மறைத்து இன்னொருவர் அதனைப் பாதுகாக்கின்றார் இதனை மக்கள் நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும் என்றார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours