(எம்.ஏ.றமீஸ்)
அம்பாறை மாவட்டத்தில் நிலவி வந்த மழையுடனான காலநிலை இன்றைய தினம்(06) குறைவடைந்து காணப்பட்ட போதிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்த நிலையிலேயே உள்ளது.
தாழ்நிலப் பிரதேசங்களில் இருந்த வெள்ள நீர் வடிந்து வருகின்றது. இம்மாவட்டத்தின் சில வீதிகளில் தொடர்ந்தும் நீர் நிறைந்து காணப்படுவதால் மக்களின் போக்குவரத்திலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. 
பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயச் செய்கைகளில் நீர் நிரம்பிக் காணப்படுவதால் விவசாயிகள் பலருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நெல் விவசாயச் செய்கைகளை பெய்து வரும் அடை மழை காரணமாக தாம் கைவிட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இம்மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளின் நீர் மட்டம் அதிரித்துக் காணப்படுவதால் சில குளங்களின் பகுதிகள் உடைப்பெடுக்கக் கூடிய நிலை காணப்படுகின்றது. இதனால் குறித்த குளங்களை அண்டிய பகுதிகளில் வாழ்ந்து வரும் பொதுமக்களையும் கால்நடைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் பணிகளை துறைசார்ந்தோர் ஈடுபட்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்றொழில் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. இம்மாவட்டத்தின் கடற்பரப்பில் பலத்த மழை பெய்து வருவதுடன், கடல் கொந்தளிப்புடனும் காணப்படுகின்றது. கடலலைகள் சுமார் பத்து அடிக்கு மேல் உயர்வடைவதால் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுதல் மிகுந்த அச்சுறுத்தல்களை உண்டுபண்ணுகின்றது. இதனால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரதம் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. கடந் சில தினங்களாக மீன்பிடி நடவடிக்கைகள் மிக மந்த கதியில் இம்மாவட்டத்தில் இடம்பெறுவதால் மீனின் விலை கணிசமான அளவில் அதிகரித்துக் காணப்படுவதுடன் மீனுக்கான தட்டுப்பாடும் அதிகளவில் உள்ளது
கடந்த 24 மணித்தியாலத்தில் சாகாமம் பிரதேசத்தில் 74.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி அதிகப்படியாக இம்மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இதேவேளை அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பகுதியில் 64.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், றூபஸ் குளம் பகுதியில் 52.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பன்னலகம பிரதேசத்தில் 50.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதியத்தலாவ பகுதியில் 40.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், இங்கினியாகல பிரதேசத்தில் 36.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், அம்பாறை பகுதியில் 33.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக அம்பாறை மாவட்ட வானிலை அவதான நிலையம்  தெரிவிக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக சம்மாந்துறை பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 12461 குடும்பங்களைச் சேர்ந்த 40410 பேர் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ்  தெரிவித்தார்.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 6548 குடும்பங்களைச் சேர்ந்த 21132 பேரும், காரைதீவு பிரதேசத்தில் 4007 குடும்பங்களைச் சேர்ந்த 12600 பேரும், திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் 470 குடும்பங்களைச் சேர்ந்த 1602 பேரும், சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் 108 குடும்பங்களைச் சேர்ந்த 430 பேரும் அதிகப்படியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours