2500 வருடங்களாக சிங்கள பௌத்த கலாசார பாரம்பரியம் நிலவி வருகின்ற இந்த நாட்டில் எல்லா இன மக்களும் அவரவர் சமய உரிமைகள், வழிபாட்டு சுதந்திரங்கள் ஆகியவற்றுடன் சந்தோசமாக, நிம்மதியாக வாழ முடியும் என்று கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜஹம்பத் தெரிவித்தார்.

திருகோணமலையில் உள்ள ஆளுனர் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை சம்பிரதாயபூர்வமாக பதவியை பொறுப்பேற்ற இவர் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டத்தில் இருந்து இவ்விழாவுக்கு வருகை தந்திருந்த அரசியல், சமூக, பொது நல செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு
எல்லா இன மக்களும் வழிபாட்டு உரிமைகள் அடங்கலாக அனைத்து உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றுடன் இந்நாட்டில் மகிழ்ச்சியாக வாழ முடியும். நான் கிழக்கு மாகாணத்தில் வழிபாட்டு உரிமை அடங்கலாக சகல உரிமைகளுடனும் இம்மாகாண மக்கள் சிறப்பாக வாழ்வதை இம்மாகாணத்தின் ஆளுனர் என்ற வகையில் நிச்சயம் உறுதிப்படுத்துவேன்.
ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ தூர நோக்கு, தெளிந்த சிந்தனை, தீர்க்கதரிசனம் ஆகியவற்றுடன் இந்நாட்டை கட்டியெழுப்புகின்ற வேலை திட்டங்களை இதய சுத்தியுடன் மேற்கொண்டு வருகின்றார். அவர் என்னை கிழக்கு மாகாண ஆளுனராக நியமித்தபோது முதலில் தயக்கமாகதான் இருந்தது. ஆயினும் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்கிற பெருவிருப்பத்துடன் இங்கு வந்திருக்கின்றேன்.
கிழக்கு மாகாணம் வந்தாரை வரவேற்கும் பூமி. இயற்கை அழகும், செழிப்பும் நிறைந்தது. ஒட்டுமொத்த நாட்டையும் போஷிக்க கூடிய அளவுக்கு இயற்கை வளங்களை கொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாண மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் புரிந்து ஐக்கியம், சமாதானம், சக வாழ்வு, சகோதரத்துவம் ஆகியவற்றுடன் வாழ வேண்டும் என்பது எனது பிரார்த்தனையும், அபிலாஷையும் ஆகும்.
நான் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் எந்தவொரு பாரபட்சமும் காட்டாமல் எல்லா மக்களையும் சமமாக நடத்தி அபிவிருத்தி பணிகளை நேர்த்தியான முறையில் நிச்சயம் இம்மாகாணத்தில் முன்னெடுப்பேன். அதே போல எனக்கு தமிழ் மொழி தெரியாது. இருப்பினும் தமிழை விரைவில் கற்று உங்கள் முன்னிலையில் தமிழில் நான் உரையாற்றுவேன்.
பசுமை புரட்சி இந்நாட்டில் மலர்தல் வேண்டும். அதற்காக வீட்டு தோட்டங்கள் நிறையவே உருவாக்கப்பட வேண்டும் என்பது எனது பேரவா. கிழக்கு மாகாணத்தில் வீட்டு தோட்டங்களை உருவாக்குகின்ற விசேட செயல் திட்டங்களை முன்னெடுப்பேன். அதற்காக மர நடுகையை ஊக்குவிக்கின்றேன். அதற்காக ஆளுனர் அலுவலகத்தில் இன்று சம்பிரதாயபூர்வமாக மர நடுகையை மேற்கொள்கின்றேன்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours