( துறையூர் தாஸன் )



களுவாஞ்சிக்குடி பிரதான அஞ்சல் அலுவலகம் நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுவதனால் பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது ,

கல்முனை மட்டு பிரதான பாதையில் பிரதான அஞ்சல் அலுவலகம் பாழடைந்து கவனிப்பாரற்று காணப்படுவதனால் குறித்த அஞ்சல் அலுவலகத்தின் செயற்பாடுகள் தற்காலிக வாடகை வீட்டில் இயங்கி வரும் நிலையிலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக பொது மக்களால் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

களுவாஞ்சிக்குடி செயலகப் பிரிவுக்குட்பட்ட பொதுமக்களுக்கு சேவை வழங்கிய பிரதான இவ் அஞ்சல் அலுவலகம் 2011ஆம் ஆண்டு காலப்பகுதியில் படையினரால் விடுவிக்கப்பட்ட நிலையிலும், இற்றை வரை இவ் அலுவலகத்தினை அரச அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் கண்டுகொள்ளாத நிலை காணப்படுவதாக பொது அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கின்றன. 

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலும், சுற்றுலா நீதிமன்ற கட்டிடத் தொகுதி, பஸ் நிலையம், வலயக்கல்வி அலுவலகம், ஆதார வைத்தியசாலை, தேசிய பாடசாலை, வங்கிகள் ஆகியவற்றுக்கு அண்மையிலுள்ள இவ் அஞ்சல் அலுவலக கட்டடம், பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் நிலையிலேயே அஞ்சல் அலுவலகத்தின் செயற்பாடுகள் தற்காலிக வாடகை வீட்டில் இயங்கி வந்தது.

அஞ்சல் அலுவலகத்தின் தேவையறிந்தும் சேவை கருதியும் முறையாக புனரமைத்து இயங்க வைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் உட்பட, மட்டு. மக்கள் பிரதிநிதிகள் மேற்கொள்ள வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours