(எம்.ஏ.றமீஸ்)



அம்பாறை மாவட்டத்தில் உள்ள றம்புக்கன ஓயா, நாமல் ஓயா பிரதேசத்தில் உள்ள அந்தோனியார் குளம், சாகாமம் குளம் போன்றவற்றின் நீர் மட்டம் வெகுவாக உயர்வடைந்து காணப்படுன்றது. இந்நிலையில் அந்தோனியார் குளம் தற்போது உடைப்பெடுக்கும் நிலையில் காணப்படுவதால் அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டு வருகின்றோம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ்  தெரிவித்தார். 


அம்பாறை மாவட்டத்தில் நிலவும் மடையுடனான காலநிலை தொடர்பில் இன்று(05) அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,  மேற்கூப்பட்ட குளங்களை அண்டிய தாழ்நிலப் பிரதேசங்களில் வசித்து வருபவர்களும், அங்குள்ள கால்நடைகளுக்கும் விவசாயச் செய்கைகளுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகையால் இப்பகுதியில் வசித்து வருபவர்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு வேண்டுவதுடன், இம்மக்களின் பாதுகாப்பு நாடி தம்மாலான முன்னாயத்த ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் பெரிய குளங்களின் நீர் மட்டம் பாரியளவில் உயர்வடைந்து காணப்படுகின்றது. இதனால் மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. 

அத்தோடு சாகாமம் குளத்திற்கு நீர் செல்லும் அணைக்கட்டுப் பகுதியில் இறுகல் நிலை காணப்படுவதால் அதனை சீர் செய்து இக்குளத்தில் நீர் நிரம்பி வழியும் செயற்பாட்டினைக் கட்டுப்படுத்தும் வகையில் நீர்ப்பாசனத் திணைக்களம், துறைசார் நிறுவனங்கள் மற்றும் முப்படையினரின் உதவியினை கொண்டு அதனை சீர்படுத்தவுள்ளோம். 

மழையுடனான காலநிலை நிலவும் இக்காலப் பகுதியில் ஆறுகள், குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் மக்கள் நீராடுவதை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் பல்வேறு ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக நீரின் வேகமும், நீர்மட்டத்தின் அளவும் அதிகளவில் இருப்பதனால் இதன் வீரியத்தன்மை ஆபத்தினை உண்டு பண்ண வாய்ப்பள்ளதோடு, பல்வேறு நோய்கள் தொற்றுவதற்கும் காரணமாகவும் அமைந்து விடும்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சுமார் பதினைந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் வசித்து வரும் தாழ்நிலப் பிரதேச மக்களில் பெரும்பாலானோர் தமது உறவினர்களின் இல்லங்களிலும், இடைத்தங்கல் முகாம்களிலும் வசித்து வருகின்றனர். தற்காலிக முகாம்களில் இடம்பெயர்ந்து இருப்போருக்கு மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தரவிற்கமைவாக அவர்களுக்கு சமைத்த உணவும், உறவினர்களின் இல்லங்களில் இடம்பெயர்ந்திருப்போருக்கு உலருணவுப் பொருட்களும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள 4342 குடும்பங்களைச் சேர்ந்த 13859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் 470 குடும்பங்களைச் சேர்ந்த 1602 பேரும், காரைதீவு பிரதேச செயலகப் பிரிவில் 3327 குடும்பங்களைச் சேர்ந்த 10532 பேரும், ஆலையடிவேம்பில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 89 பேரும், உகன பிரதேசத்தில் 44 குடும்பங்களைச் சேர்ந்த 157 பேரும், கல்முனை வடக்கு பிரதேசத்தில் 449 குடும்பங்களைச் சேர்ந்த 1449 பேரும், சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 30 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாவட்டத்தின் தாழ்நிலப் பிரதேசங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் துரித கதியில் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. இதற்கென துறைசார் நிறுவனங்கள் பொது நல அமைப்புக்கள் என்பன இணைந்து செயற்பட்டு வருகின்றன.

கல்முனை பிராந்தியத்தையும் நாவிதன்வெளி படுவான் பிரதேசத்தையும் இணைக்கும் பிரதான கிட்டங்கி தாம்போதியினை அண்டிய பிரதேசத்தில்; நிரம்பியிருக்கும் வெள்ள நீரை அப்புறப்படுத்துவதில் தாமத நிலை ஏற்பட்டுக் காணப்படுகின்றது. இப்பகுதியில் உள்ள நீரை மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லாறு பாலத்தின் கீழால் கொண்டு செல்லப்பட வேண்டியுள்ளது.; மீண்டும் வெள்ளம் பீறிட்டுப்பாய்கிறது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் போன்றோர் இவ்விடயத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் இந்நீரை அப்புறப்படுத்தும் உபாயம் ஒன்றை மேற்கொள்ள துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours