தமிழர்கள் நன்றியுடன் வாழவேண்டும், தமிழர்கள் எப்போதும் நன்றி உணர்வு படைத்தவர்கள் என்பதை உணர்த்தும் கலாசார பாரம்பரியமே பொங்கல் பண்டிகையாகும் என, மட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி பட்டிருப்புத் தொகுதித் தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
அம்பிளாந்துறை திசைகாட்டி மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் விழா மையத்தின் தலைவர் பு.புவனகாந்தன் தலைமையில் வாகைமர முற்றத்தில் இடம்பெற்றபோது முதன்மை அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மனிதர்கள் செய்நன்றி மறவாமல் இருக்கவேண்டும் அதிலும் தமிழர்கள் நன்றியறிதலை தன்வாழ்நாள் முழுவதும் மறவாமல் கடைப்பிடிக்கவேண்டும் என்ற உன்னத சிந்தனையை சொல்லித்தரும் ஒரு பண்டிகையாகவே பொங்கல் பண்டிகை அமைந்துள்ளது.
ஒவ்வொரு வருடத்திலும் தொடர்ச்சியாக மூன்று பண்டிகைகள் தொடராக கடைப்பிடிக்கும் கலாசார பாரம்பரியம் தமிழர்களுக்கும் இந்துமத மக்களுக்கும் பறைசாற்றுவதை நாம் ஆழமாக சிந்தித்தால் அதன் உண்மை விளங்கும். ஒவ்வொரு வருடமும் மார்கழி 31ஆம் திகதி அதாவது தை மாதம் 1 ஆம் திகதிதிக்கு முதல்நாள் வருட இறுதிநாள் போகிப் பொங்கல் பண்டிகை நாளாகும். போகி என்பதன் பொருள் போக்கி என்பதாகும். போக்கி என்றால் வீட்டில் உள்ள பழைய பொருட்கள் பாவித்த பொருட்கள் இவைகளுக்கு நன்றி தெரிவித்து வழிபடும் பொங்கல் பண்டிகையாகும். இப்பண்டிகையிலிருந்து, பழையவர்களை அதாவது முதியவர்களை மதித்து நன்றி செலுத்தும் பண்பு வெளிப்படுகிறது.
தைமாதம் முதலாம் நாள் தமிழர் திருநாள் பொங்கல் விழா. நிலத்தின் பயிர்களையும் விவசாய பயிர்செய்கைக்கு வளங்களையும் தந்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி இல்லங்கள் தோறும் பொங்கலிட்டு பூசை வழிபாடு செய்வது இதன் தத்துவம். எம்மை உயிர் வாழவைத்த உணவுகளை தரும் மூலப்பொருளான விவசாய விளைபொருட்களை தருவதற்கு மூல காரணமாக இருந்த சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது போல் நாம் எமக்கு உதவி செய்யும் மனிதர்களுக்கு நன்றி செலுத்தவேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. இன்னும் சொல்வதானால் கல்வியை ஊட்டும் குருவான ஆசிரியரை மாணவர்கள் நன்றி செலுத்த வேண்டும். உதவி செய்பவரை நன்றி செலுத்த வேண்டும் என்பதை தைப்பொங்கல் பண்டிகை எமக்கு உணர்த்தி நிற்கின்றது.
உழவனுக்கு நிலத்தை உழுது பண்படுத்த மூலகாரணமாய்
இருந்த எருது, மாடுகள் போசாக்கு உணவான பால், தயிரை மனிதருக்கு தரும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் பண்டிகையே பட்டிப்பொங்கல் அல்லது மாட்டுப்பொங்கல் ஆகும். இப்பண்டிகை
தைப்பொங்கல் பண்டிகையின் அடுத்த நாளே கொண்டாடப்படுகிறது. அதாவது கோமாதா பூசை வழிபாடு, ஆறறிவு படைத்த மனிதர்கள் ஐந்தறிவு கொண்ட மிருகங்களுக்கு நன்றியுடன் வாழுங்கள், வாய்பேசா பிராணிகளுக்கு அன்பு செலுத்துங்கள் என்பதை பட்டிப்பொங்கல் பண்டிகை எமக்கு உணர்த்துகிறது.
நமது முன்னோர்கள் ஒவ்வொரு விடயத்தையும் காரணம் இல்லாமல் செய்யவில்லை மனிதர்களின் மனங்களை பண்படுத்தும் விதமாகவே தமிழர்களின் பொங்கல் விழாக்களான போகிப்பொங்கல், தைப்பொங்கல், பட்டிப்பொங்கல் எல்லாமே சமய சம்பிரதாயமாக பூர்வீக காலம் தொட்டு அமைந்துள்ளது.

Post A Comment:
0 comments so far,add yours