(சா.நடனசபேசன்)
கற்பித்தலில் நுணுக்கங்களை ஆசிரியர்கள் கையாளுகின்ற போதுதான் கல்வியிலே எதிர்பார்த்த அடைவினை  பெற்றுக்கொள்ள முடியும் என்பதனை உணர்ந்து ஆசிரியர்கள் புதிய புதிய நுணுக்கங்களைக் கையாளவேண்டிய தேவை இருக்கின்றது.

குறிப்பாக நவீன உலக மாற்றத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள் புதுப்புது விடயங்களைக் கற்றுத் தேறி  அதனை அறிகின்ற போதுதான்  அதனை மாணவர்களுக்கு ஒப்புவிக்கமுடியும் என வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் தெரிவித்தார்.

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளிக் கோட்டத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அடைவை அதிகரிப்பதற்கான ஆலோசனைக்கூட்டம் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ராணமடு இந்து மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் தலைமையுரையில்  மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த ஆண்டினை விட இவ் வருடத்தில் சித்தி வீதத்தினை அதிகரிப்பதற்கான உத்திகளை ஆசிரியர்கள் கையாளவேண்டும் அதற்கான ஆலோசனைகளையும் உதவிகளையும் வலயக்கல்வி அலுவலகம் செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம்.

கிழக்குமாகாணத்தினை  9 ஆவது இடத்தில் இருந்து முன்னுக்குக் கொண்டுவருவதற்கு எமது மாகாணக் கல்விப்பணிப்பாளர் பல முயற்சிகளையும் எமக்கு ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். அதனை நிறைவேற்றவேண்டுமானால் நாம் அனைவரும் அயாராது பாடுபட்டு எமது வலயத்தின் அடைவினை அதிகரிக்கச் செய்யவேண்டும் அப்போதுதான் மாகாணத்தின் அடைவு வீதத்தினை அதிகரிக்கச் செய்யமுடியும்

கடந்த வருடத்தினை  பொறுத்தமட்டில் நாவிதன்வெளிக்கோட்டத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைவு வீதம் அதிகரிக்கப்பட்டது  உண்மையில் இந்த வெற்றிக்காக உழைத்த ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டுவதுடன் இவ்வருடமும் பெருந்தொகையான மாணவர்களைச் சித்தியடையச் செய்யவேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான  செல்வி வி.நிதர்சினி, றியால் ஆசிரிய ஆலோசகர் கே.அற்புதராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours