(மட்டக்களப்பு நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020 பொதுத் தேர்தலை கொரோனா தடுப்பு சுகாதார வழிமுறைகளுக்கமைய நேர்த்தியாக நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா தேர்தல் ஏற்பாடு தொடர்பாக ஊடகங்களுக்;கு கருத்து வெளியிடுகையில் தெரிவித்தார்.
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 2020 தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
இம் மாவட்டத்தில் உள்ள கல்குடா, பட்டிருப்பு, மட்டக்களப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் 4 இலட்சத்தி 9 ஆயிரத்தி 808 வாக்காளர்கள் ஐந்து பாராளுமன்றப் பிரதிநிகளைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்கவுள்ளனர். இதற்காக 16 அரசியல் கட்சிகளையும், 22 சுயேச்சைக்குழுக்களையும் சேர்ந்த 304 அபோட்சகர்கள் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததில்12 ஆயிரத்தி 815 வாக்காளர்களில் 97 சதவீதமானவர்களது அஞ்சல் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வழமைக்கு மாறாக இம்முறை கோவிட் 19 கொரோனா தொற்று அச்சம் காரணமாக சுகாதார விதிமுறைகளைப் பேணி இத்தேர்தல் நடாத்த சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. மேலும் இத்தேர்தலில் மட்டக்களப்புத் தொகுதியில் 194 வாக்கெடுப்பு நிலையங்களும், கல்குடா தொகுதியில் 119 வாக்கெடுப்பு நிலையங்களும், பட்டிருப்புத் தொகுதியில் 115 வாக்கெடுப்பு நிலையங்களுமாக மொத்தம் 428 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்புக் கடமைகளுக்காக இம்முறை 4 ஆயிரத்தி 710 அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இம்முறை சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வாக்கெண்ணும் பணிகளுக்காக பிரதான வாக்கெண்ணும் நிலையங்களாக கல்குடா மற்றும் பட்டிருப்புத் தொகுதிக்கென மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும், மட்டக்களப்புத் தொகுதிக்கென மகாஜனக் கல்லூரியும் செயற்படவுள்ளன. இதில் 34 வாக்கெண்ணும் மண்டபங்களும் இந்துக்கல்லூரியிலும், 33 வாக்கெண்ணும் மண்டபங்கள் மகாஜனக்கல்லூரியிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1417 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் அமர்த்தப்படவுள்ளனர்.
இதுதவிர இத்தேர்தல் கடமைகளுக்காக 307 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. இவற்றில் இம்மாவட்டத்தைச்சேர்ந்த அரச திணைக்கள வாகனங்கள் 159 உம், பிற மாவட்ட அரச வாகனங்கள் 54 உம் ஏனையவை வாடகைக்கு அமர்த்தப்பட்ட தனியார் வாகனங்களாகும்.
வாக்காளர்கள் தமது சுகாதார நலகன்கருதி வாக்களிக்கச் செல்லும்போது போனாக்களைக் கொண்டு செல்லுமாறும் கட்டயாம் முகக்கவசம் அணிந்து வருமாறும், வாக்குச் சாவடிக்குள் நுளையும்போதும், வாக்களித்து விட்டு வெளியேறும்போதும் தொற்று நீக்கித்திரவம் கொண்டு வாக்காளர் தமது கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் மக்களைக் கேட்டுக் கொண்டார்.
மற்றும் வாக்களிப்பு இடம்பெறவுள்ள 428 வாக்குச் சாவடிகளுக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 57 நடமாடும் பொலிஸ் பிரிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வாக்களிப்பிற்காக வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்வதற்கும், வாக்களிப்பின் பின்னர் வாக்குப் பெட்டிகளை வாக்கெண்ணும் நிலையத்திற்கு கொண்டுவருவதற்குமான பாதுகாப்பு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மற்றும் தேர்தலுக்குப் பின்னர் வன்செயல்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் பிரதேசங்கள் மற்றும் பிரமுகர்களின் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக வீதித் தடைகள், நடமாடும் பொலிஸ் பிரிவுகள், மோட்டார் சைக்கிள் நடமாடும் பிரிவுகள் என்பன ஏற்படுத்தப்பட்டடுள்ளது.
இதுதவிர வாக்கெண்ணும் பணிகள் தேர்தல் தினத்திற்கு மறுதினமே நடைபெறும் எனவும், வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்து வாக்கெண்ணும் மண்டபம் சீல் செய்யப்படுவதுடன் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிசாரும் பாதுகாப்புப் படையினரும் ஈடுபடுத்தப்படவுள்ளனர் இதற்கு மேலதிகமாக ஒவ்வொரு அரசியல் கட்சியினதும், சுயேச்சைக் குளுவினரினதும் பிரதிநிதகள் மூவர் வீதம் வாக்கெண்ணும் நிலைய வாளாகத்தினுள் தரித்திருக்க அனுமதிக்கப்படுவர் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.


Post A Comment:
0 comments so far,add yours