தமிழ் பத்திரிகைகள் ஊடக தர்மத்தை பேணி சம வாய்ப்பு தந்தமையே பாராளுமன்ற உறுப்பினரா க அவர் தெரிவு செய்யப்படுவதற்கு திறவு கோலாக அமைந்தது என்று ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ தலைமையிலான வியத்மகே அமைப்பு சார்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் மொட்டு கட்சியில் போட்டியிட்டு வெற்றி அடைந்துள்ள அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் முன்னாள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திலக் ராஜபக்ஸ தெரிவித்தார்.
இவரின் அம்பாறை அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு
நான் இம்மாவட்டத்தில் வாழ்கின்ற அனைத்து இன மக்களினதும் கணிசமான வாக்குகளை பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகி உள்ளேன். குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் ஏராளமான வாக்குகள் எனக்கு கிடைத்த காரணத்தாலேயே நான் விருப்பு வாக்குகளில் முன்னிலைக்கு வந்து வெற்றி வாகை சூட கூடியதாக அமைந்தது.நண்பர் முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம் தலைமையிலான அனைத்து கட்சி செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் வாக்கு வங்கி எனது வெற்றியை தீர்மானிக்கின்ற சக்தியாக அமைந்தது.
அதே போல தமிழ் பத்திரிகைகள் ஊடக தர்மத்தை பேணி சம வாய்ப்பு தந்தமையே நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதற்கு திறவுகோலாக அமைந்தது என்கிற விடயத்தை நன்றி அறிதலுடன் இத்தருணத்தில் பகிர்ந்து கொள்கின்றேன். எனக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும், எனது வெற்றிக்காக உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.
ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவை முன்னுதாரணமாக கொண்டவனாகவே நான் எனது பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து இருந்தேன். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எந்தவொரு கட்டத்திலும் அவர் எந்த கட்சியையும், எந்த வேட்பாளர்களையும் மட்டம் தட்டி பேசவே இல்லை. இன வெறுப்பூட்டல் பிரசாரங்களை முன்னெடுக்கவில்லை. பிரிவினைவாத கோஷங்களை முன்வைக்கவில்லை. அவருடைய கொள்கைகளை மாத்திரம் மக்கள் முன்னிலைக்கு சமர்ப்பித்து மாபெரும் வெற்றியை ஈட்டினார்.
அதே போலவே நானும் எந்த கட்சியையோ, வேட்பாளரையோ இழிவுபடுத்தாமல், இன வெறுப்பூட்டல் பிரசாரங்களை மேற்கொள்ளாமல், பிரிவினைவாத கோஷங்களை முன்னெடுக்காமல் மகத்தான வெற்றியை எட்டி உள்ளேன் என்பதில் பெருமையும், பெருமிதமும் அடைகின்றேன். அத்துடன் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவின் பாத சுவடுகளை அடியொற்றி பின்பற்றியவனாக நாட்டினதும், மக்களினதும் பொதுநலன் சார்ந்த அரசியலை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வேன் என்று இத்தால் உறுதி தருகின்றேன்.
எமது அம்பாறை மாவட்ட மக்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. அவை மிக நீண்ட காலமாக தீர்க்கப்படாமலேயே உள்ளன. குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. இம்மாவட்ட மக்கள் அனைவரினதும் பிரச்சினைகளை தீர்த்து தருவதற்கு நிச்சயம் என்னால் முடிந்த உச்ச பட்ச நடவடிக்கைகளை எடுப்பேன். திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் இம்முறை தமிழ் மக்களுக்கு தமிழ் பிரதிநிதித்துவம் கிடைக்கவே இல்லை. ஆயினும் நான் தமிழ் மக்களுக்காக பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் விசேடமாக ஓங்கி குரல் கொடுப்பதுடன் அவர்களுக்கான உரிமைகள், அபிவிருத்திகள், மேம்பாடுகள் ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கும் அர்ப்பணிப்பு, பற்றுறுதி, இதய சுத்தி ஆகியவற்றுடன் செயற்படுவேன்.

Post A Comment:
0 comments so far,add yours