இலங்கை மக்களின் அமோக ஆதரவைப்பெற்ற கட்சியாக பொதுஜன பெரமுன இந்த தேர்தலின்மூலம் நிருபணமாகியுள்ளது. இம்முடிவு எதிர்பார்த்ததுதான். இருப்பினும் பிரதான பழம்பெரும் ஜ.தே.கட்சி இந்தளவுக்கு மண்கவ்வும் என்று எதிர்பார்க்கவில்லை.
2016இல் ஸ்ரீலங்கா சுதந்நதிரக்கட்சியுடனான முரண்பாடு காரணமாக ராஜபக்ச குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட கட்சிதான் இப்பொதுஜன பெரமுனை.அதன் தேசியஅமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பஷீல்ராஜபக்ச திகழ்கிறார்.
உருவாக்கப்பட்டு நான்கு வருட காலத்துள் தேசியரீதியில் அமோக ஆதரவைப்பெற்றதற்கு மந்திரசக்தியோ காந்தசக்தியோ காரணமல்ல. மாறாக கடந்த நல்லாட்சியின் மீதான வெறுப்பு எதிர்க்கட்சிகளின் பிளவு போன்ற பல விடயங்களைக்குறிப்பிடலாம்.
1977க்குப் பிறகு அறுதிப்பெரும்பான்மையோடு ஒரு கட்சி தனித்து ஆட்சியமைக்கப்போகின்றதென்றால் அது பொதுஜன பெரமுனக் கட்சிதான் என்றால் அது மிகைப்பட்ட கூற்றலல்ல.
ஆம்.இலங்கையின் 09ஆவது நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றுள்ளது.
நாடு முழுவதும் 19 தேர்தல் மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 128 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம்இ வன்னிஇ மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 47 ஆசனங்களைக் கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளதுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சி 9 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
தேசிய காங்கிரஸ் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முஸ்லிம் தேசிய கூட்டணி ஆகியன தலா ஒவ்வோர் ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.
இதேவேளை 29 தேசியப் பட்டியல் உறுப்பினர்களில் 17 உறுப்பினர்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்டுள்ளது.
அத்துடன் 7 உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தி ஐக்கிய தேசிய கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் எங்கள் மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தேசிய பட்டியல் ஆசனம் வீதமும் வழங்கப்பட்டுள்ளன.
இறுதி முடிவு:
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 128 + 17 = 145
ஐக்கிய மக்கள் சக்தி - 47 + 7 = 54
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு - 9 + 1 = 10
தேசிய மக்கள் சக்தி - 2 + 1 = 3
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 2
ஐக்கிய தேசிய கட்சி - 1
தேசிய காங்கிரஸ் - 1
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி - 1
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி - 1
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி - 1
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 1
முஸ்லிம் தேசிய கூட்டணி - 1
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1
எங்கள் மக்கள் சக்தி - 1
இது தேசிய அரசியலின் இன்றைய நிலை. சரி மீண்டும் பொதுஜணபெரமுனையின் வெற்றி தொடர்பாக பார்ப்போம்.
2018இல் உள்ளுராட்சித்தேர்தலின்போது புதிய கட்சியாக முதலில் போட்டியிட்டது. அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி தேர்தல் நல்லதொரு திருப்புமுனையாக அமைந்தது
நல்லாட்சியில் ஒன்றாகவிருந்த சக்திகள் தவிடுபொடியாகும்வண்ணம் செயற்பாடுகள் நடந்தேறிவந்திருக்கின்றதை காணக்கூடியதாயுள்ளது. பழம்பெரும் ஜ.தே.கட்சி இம்முறை ஒரு ஆசனத்தைக்கூட பெறமுடியாத துர்ப்பாக்கியநிலை நிலவியிருக்கின்றதென்றால் அதற்கான முழுப்பொறுப்பையும் முன்னாள் முதல்வர் ரணில்தான் பொறுப்பேற்கவேண்டும்.
எதிர்க்கட்சி இவ்வாறு ரணில் என்றும் சஜித் என்றும் சு.கட்சிகூட சிதறியநிலையில் பிரிந்துபட்டநிலை பொதுஜனபெரமுனைக்கு சாதகமாக இருந்ததையும் இவ்வண் சுட்டிக்காட்டுதல்பொருத்தம். அந்தவகையில் சஜித் பிரேமதாசவின் தொலைபேசி இரண்டாவது கட்சியாக எதிர்க்கட்சிநிலையிலிருக்கக்கூ டிய அந்தஸ்தைப்பெற்றுள்ளது.
இன்னுமொரு விடயம். பொதுஜன பெரமுனைக்கு இம்முறை தனியே சிங்கள மக்கள் மட்டுமல்லாமல் சிறுபான்மையினங்களும் சேர்ந்து நியாயமான வாக்ளித்திருக்கின்றன என்பதையும் சுட்டிககாடமுடியும். ஜனாதிபதி தேர்தல் போன்று சிங்களமக்கள்மட்டுமே வாக்களித்தனர் என்று சொல்லமுடியாதவகையில் இந்ததேர்தல் சகலரது எதிர்பார்ப்பைப்பெற்றிருந்தது.
சிறுபான்மை மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழ்மக்கள் மத்தியில் இத்தேர்தல் முடிவு பெரும் மாற்றத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. அதாவது உரிமைக்குக்கு அப்பால் அபிவிருத்தி அரசியலை விரும்பும் போக்கு தென்படுகிறது.
அதன்காரணமாக வடக்கு கிழக்கில் விழமையாக 22 என்றும் 16என்றும் உறுப்பினர்களைப்பெற்று வந்த த.தே.கூட்டமைப்பு இம்முறை ஒற்றை இலக்கத்துள் அதாவது 9 என்ற எண்ணிக்கைக்குள் சுருண்டது. அக்கட்சி தேசியரீதியில் ஒட்டுமொத்தமாகப்பெற்றுக்கொண்ட 327168 வாக்குகளைப்பெற்ற காரணத்துpனால் தேசியப்பட்டியல் ஆசனமொன்று கிடைத்துள்ளது. அதனை அரசியல்அநாதையாகவுள்ள அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுவருகிறது. தேர்தலுக்கு முன்னரும் தலைவர் சம்பந்தர் இதுவிடயத்தை உறுதிப்படுத்தியிருந்தார்.
த.தே.கூட்டமைப்பு கடந்தகாலத்தில் நடாத்திவந்த அரசியல் நடவடிக்கைகள் தமிழ்மக்கள் மத்தியில் அதிருப்தியை அல்லது வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். அதன் வெளிப்பாடாக யாழ்ப்பாணத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 3ஆகக்குறைந்தது தொடக்கம் அம்பாறையில் தமிழ்ப்பிரதிநிதித்துவம் இல்லாமல் போனமை வரை கூறலாம்.
தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோனதிராஜா செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் மக்களால் நிராகரிக்கப்பட்டதும் இவ்வெறுப்பின் அடையாளமாகவே கருதஇடமுண்டு.
ஆக மக்கள் இன்று அபிவிருத்தி வேலைவாய்ப்பு என்பவற்றை நாடி ஓடுதலைக்காணலாம். இது காலத்தின் கட்டாய தேவையாக உணர்கிறார்கள். எனவே உழுத்துபபோன பழைய பல்வியை மீண்டும் மீண்டும் கூறி வாக்குகளைப்பெறமுடியதென்பதை இத்தேர்தல் உணர்த்திநிற்கிறது.
திகாமடுல்ல மாவட்டத்தில் காலாகாலமாக பிரதிநிதித்துவத்தைப்பெற்றுவந்த த.தே.கூட்டமைப்பை இரண்டே மாதங்களில் மட்டக்களப்பில் இருந்துவந்த கருணா அம்மான் 4ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளால் தோற்கடித்துள்ளமையும் மக்களின் மனநிலையில் உள்ள மாற்றத்தைக்காணலாம்.
மட்டக்களப்பு முடிவும் இதனையே கூறுகிறது. த.தே.கூட்டமைப்பின் எதிரணி என்று சொல்லக்கூடிய பிள்ளையான் மற்றும் வியாழேந்திரனை மக்கள் தெரிவுசெய்துள்ளமையும் மற்றுமொரு காரணமாகும். பழையமுகங்களை மக்கள் வெறுத்தொதுக்கியுள்ளனர். திருமலையிலும் கணிசமானளவு வாக்குகள் கூட்டமைப்பிற்கு குறைந்துள்ளது.
எனவே த.தே.கூட்டமைப்பு தன்னை விரைவாக சுயவிமர்சனம் செய்யவேண்டிய தார்மீகக்கடமை உள்ளது. தமிழரின் தேசியக்கோரிக்கையை கொதிநிலையில் வைத்து அதற்காக உயிர்ப்புள்ள வகையில் உணர்வுபூர்வமாக போராடக்கூடிய தகைமையுடையவர்களின் கைகளுக்கு தமிழரசுக்கட்சியும் கூட்டமைப்பும் செல்லாவிட்டால் அவற்றின் எதிர்காலம் மங்கி சூனியமாகிவிடும்.
எனவே வெற்றிவாகை சூடியுள்ள பொதுஜன பெரமுனை சிறுபான்மையினரை அரவணைத்துச்செல்லும் பாங்கிலேயே அவர்களது எதிர்காலம் மற்றும் நாட்டின் சமாதானம் இனசௌயன்யம் அபிவிருத்தி என்பன நிலைபேறாக இருக்கும் என்பதில் ஜயமில்லை.
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்

Post A Comment:
0 comments so far,add yours