(காரைதீவு  நிருபர் சகா)


எதிர்வரும் கிழக்குமாகாணசபைத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலிருந்து தமிழ்மக்கள் சார்பில் ஓரணியில் ஒருபொதுச்சின்னத்தில் போட்டியிட சகல கட்சிகளையும் சந்தித்து வேண்டுகோள் விடுக்கப்படவுள்ளது.

இத்தீர்மானம் நேற்று (23) ஞாயிற்றுக் கிழமை  ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்திலே நடைபெற்ற அம்பாறை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மாவட்டமட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

ஆலையடிவேம்பு 'அன்புக்கரங்கள் அமைப்பின் அனுசரணையில் உதயமான அம்பாறை மாவட்ட தமிழர் ஒருங்ணைப்புக்குழு மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளது.

 'அன்புக்கரங்கள்' அமைப்பின் சார்பில்  பொறியியலாளர்இராசையா யுவேந்திரா ஊடகவியலாளர் வி.சுகிர்தகுமார் ஆசிரியர் எஸ்.நிர்மலருபன் ஆகியோரின் விளக்கவுரையுடன் கூட்டம் ஆரம்பமானது.

மாவட்டத்தின் பலபாகங்களிலுமிருந்து கலந்துகொண்ட பிரதிநிதிகள் தத்தமது அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்து கூட்டத்தில்  கலந்துரையாடல் நடைபெற்றது. பலரது அபிப்பிராயமும் கருத்தும் அறியப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த 1994 பொதுத்தேர்தல் மற்றும் 2020 பொதுத்தேர்தலின்போது தமிழர்பிரதிநிதித்துவம் இல்லாமல்போன சந்தர்ப்பங்களை மையமாகவைத்து கற்றறிந்த பாடங்கள் எனும் மகுடத்தின்கீழ் இப்பிரதிநிதிகள் அனைவரும் இம்முறை கிழக்குமாகாணசபைத்தேர்தலில் சகல கட்சிகளும் ஓரணியின்கீழ் பொதுச்சின்னத்தின்கீழ் போட்டியிட முன்வரவேண்டும் என்ற கருத்தை ஏகோபித்தரீதியில் முன்வைத்தனர்.
பொத்துவில் தொடக்கம் பெரியநீலாவணை ஈறாகவுள்ள தமிழ்க்கிராமங்கள் அனைத்திற்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அப்பகுதிகளில் மக்களுக்கு ஓரணியில் திரளுவதற்கான கட்டாயம் பற்றி விளக்கமளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.
இறுதியில் செயற்குழுவொன்றும் அரசியல்கட்சிகளை சந்திப்பதற்கான ஒரு குழுவும் ஆலோசனைசபையும் தெரிவுசெய்யப்பட்டன.
மிகவிரைவில் சம்பந்தப்பட்ட கட்சிகளின் செயலாளர்களுக்கு உரியமுறையில் தகவலை அனுப்பி சந்திப்பதற்கான நேரத்தைப் பெற்று சந்திப்பதென முடிவுசெய்யப்பட்டது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவத்தை இழந்த காரணத்தின் எதிரொலியாக கிழக்கு மாகாணசபைக்கான இம்முன்னேற்பாடாக இக் கூட்டம் நேற்றுமுன்தினம்  இரண்டாவது தடவையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மிக விரைவில் மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெறவிருப்பதால் இப்போதிலிருந்து அதற்கான மதி நுட்பமான வியூகங்களை அமைத்து 3 பிரதி நிதிகளை அனுப்பி வைப்பதன் மூலமே எங்கள் மீது இப்போது விழுகின்ற மற்றவரின் ஏளனப்  பார்வைகளுக்கு சரியான பதிலடியைக் கொடுக்க முடியும்  என அங்கே பலரும் கருத்துரைத்தனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours