நூருள் ஹுதா உமர், 

கடந்த ஒரு தசாப்த காலமாக கல்முனைப் பிராந்திய மின்பொறியியலாளர் பிரிவில் கடமையாற்றி அங்கு புரட்சிகரமாக பல்வேறு சேவைகளை செய்த பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான், அம்பாறை பிரதம மின்பொறியியலாளர் பிரிவுக்கு மாற்றலாகிச் செல்வதை முன்னிட்டு அவரை கௌரவித்து பிரியாவிடை வழங்கும் நிகழ்வு 2020.10.03 ஆம் திகதி சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் கல்முனை பிராந்திய பிரதம பிரவின் உதவி மின்பொறியியலாளர் வீ.ரீ.சம்மந்தன் தலைமையில் இடம்பெற்றது.

அம்பாறையில் கடமையாற்றி மாற்றலாகி கல்முனை பிரதம மின்பொறியியலாளர் பிரிவில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ள பொறியியலாளர் ஏ.எம்.ஹைக்கல் அவர்கள் கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய மின் அத்தியட்சகர்கள் மற்றும்  நிர்வாக ஒருங்கிணைப்பாளர் எப்.அகிலேந்திரன் உள்ளிட்ட அத்தனை ஊழியர்களும் பங்கு கொண்டிருந்தனர்.

கடந்த 2007 ஆம் ஆண்டு திருகோணமலையில் மின்சாரசபையுடன் தனது பயணத்தை ஆரம்பித்த பர்ஹான், 2010  ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் சர்ச்சைகள் நிறைந்த கல்முனையில் அமைந்துள்ள பிராந்திய மின்பொறியியலாளர் காரியாலயத்தில் அதன் ஆறாவது பிராந்திய மின்பொறியியலாளராக தனது கடமையை ஆரம்பித்தார்.

அவரது சேவைக்காலத்தின்போது பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்து எவரும் ஆச்சாரியப்படும் அளவுக்கு கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் மாற்றங்களை செய்து காட்டினார். வாடகைக்கட்டிடத்தில் இயங்கிய குறித்த காரியாலயத்தை தனது அயராத முயச்சியின் காரணமாக தங்களுக்கு என தனியான கட்டிடத்தை அமைத்து கல்முனை நகருக்கே ஒரு வரலாற்றை எழுதிச்சென்றார்.

சாய்ந்தமருதில் மின் பாவனையாளர் சேவை நிலையம் ஒன்றை நிறுவி அந்தமக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுத்த பர்ஹான், அங்கும் நிரந்தர கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான அத்தனை பணிகளையும் நிறைவு செய்துள்ளார். பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவாக காணப்பட்ட கல்முனை அலுவலகத்தை பிரதம மின் பொறியியலாளர் அலுவலகமாக தரமுயர்த்தி விட்டுச் செல்லும் அவர், பிராந்தியம் எங்கும் காணப்பட்ட அலுமினியம் தொடர்கம்பிகளை அகற்றி ABC கேபிள்களை மாற்றியதோடு நின்றுவிடாது புதிதாக அதிக மின் பிறப்பாக்கிகளையும் பொருத்த நடவடிக்கை எடுத்தார். தனது சேவைக்காலத்தின்போது பாவனையாளர்களுக்கு சுமார் 30000 புதிய மின் மானிகளை வழங்கிய இவர் சிறந்த நிருவாகியும் செயல் வீரனுமாவார்.

தனது தந்தை,தாய், மனைவி மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கௌரவங்களைப் பெற்றுக்கொண்ட பர்ஹானுடனான நினைவுகளை மின் அத்தியட்சகர்களான அமலேந்திரன்,எஸ்.எம்.ஆரிஸ் அக்பர், என்.எம்.ஏ.நிஸார், ஏ.எச்.எம்.பயாஸ், ஆகியோரும் பிரதம நிர்வாக ஒருங்கிணைப்பாளர் எப். அகிலேந்திரன் ஓய்வு பெற்ற முன்னாள் இலிகிதர் முனவ்பர் உள்ளிட்ட பலரும் மீட்டிச்சென்றனர்.

நிகழ்வின்போது பொன்னாடைகள் நினைவுச்சின்னங்கள்,வாழ்த்துப்பாக்கள் தங்கமாலை என பலதும் சக ஊழியர்களால் வழங்கி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours