(எம்.ஏ.றமீஸ்)

அட்டாளைச்சேனை பிரதேசத்தில்  உள்ள கடற்கரைச் சூழலினைச் சுத்தப்படுத்தி மக்களுக்கு உகந்த சுற்றாடலை கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்திற்கு அமைவாக, அட்டாளைச்சேனை பிரதேசத்தின் கடற்கரைச் சூழலினை சுத்தப்படுத்தி தூய்மைப் படுத்தும்; நிகழ்வும் தேகாரோக்கியத்தினைக் கட்டியெழுப்பும் நடைபவனியும் அட்டாளைச்சேனை றஹ்மானியாபாத் பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வேலைத் திட்டத்தின் போது அட்டாளைச்சேனை பிரதேச சபை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் ஆகியன இணைந்து தமது ஒத்துழைப்புக்களை நல்கியிருந்தன.
சோபர் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் என்.எம்.நிஸார் தலைமையில் இடம்பெற்ற இவ்வேலைத்திட்டத்தின் போது அட்டாளைச்சேனை றஹ்மானியாபாத் பிரதேசத்தில் இருந்து அட்டாளைச்சேனை கோணாவத்தை பகுதி வரை தேகாரோக்கியத்தினை கட்டியெழுப்பும் விஷேட நடை பவனி இடம்பெற்றதுடன், இப்பிரதேச கடற்கரைச் சூழல் துப்பரவு செய்யப்பட்டு அழகு படுத்தப்பட்டன.
இதன்போது சுமார் 10 கிலோமீற்றர் தூரம் கொண்ட கடற்கரையோரப் பிரதேசம் முற்று முழுதாக சுத்தம் செய்யப்பட்டதுடன், கடற்கரைப் பிரதேத்தில் உள்ள பல்வேறு கழிவுப் பொருட்கள் ஒன்று சேர்க்கப்பட்டு, பிளாஸ்றிக் பொருட்டகள், உக்காத கழிவுப் பொருட்கள், உக்கக்கூடிய கழிவுப் பொருட்கள், நீண்ட காலம் சுற்றாடலை மாசுபடுத்தும் கழிவுப் பொருட்கள் போன்றன தரம் பிரிக்கப்பட்டு அவை திண்மக் கழிவு முகாமைத்துவம் செய்யப்படும் வகையில் ஒலுவில் திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு கொண்டு சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வேலைத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வின்போது அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் நசீல், அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸ் உள்ளிட்ட விளையாட்டுக்கழக நிருவாகிகள், விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இவ்வேலைத் திட்டத்தின் பின்னர் கடற்கரைப் பிரதேசம் தூய்மைப் படுத்தப்பட்டு, அழகு படுத்தப்பட்டு காட்சி தருகின்றமை குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours