(எம்.ஏ.றமீஸ்)

அரச நிறுவனங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு வினைத்திறன் மிக்க சிறந்த சேவையினை வழங்கும் அரசாங்கத்தின் விஷேட வேலைத் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி வங்கியின் நடவடிக்கைகள் கணணி மயப்படுத்தும் ஒன்லைன் நடை முறை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.அஹமட் நசீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான வீ.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கணணி மயப்படுத்தப்பட்ட சமுர்த்தி வங்கிச் செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தார்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள 43 சமுர்த்தி வங்கிகளின் செயற்பாடுகளை கணணி மயப்படுத்தி துரித ஒன்லைன் சேவைகளை மக்களுக்கு வழங்கும் விஷேட வேலைத் திட்டம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள 43 சமுர்த்தி வங்கிகளுள், 26 வங்கிகள் கரையோரப் பிரதேசங்களில் காணப்படுகின்றன. இவற்றுள் தற்போது 20 சமுர்த்தி வங்கிகளின் சேவைகள் கணணி மயப்படுத்தப்பட்டுள்ளன.
அட்டாளைச்சேனை பிரதேச செயலக வளாகத்தில் அமையப் பெற்றுள்ள சமுர்த்தி வங்கியானது அம்பாறை மாவட்டத்தில் ஒன்லைன் மூலமாக மக்களுக்கு சேவை வழங்கும் வண்ணம் கணணி மயப்படுத்தப்பட்டுள்ள இருபதாவது வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.
கணணி மயப்படுத்தப்பட்ட இச்சேவை மூலம் சமுர்த்தி திணைக்களத்தின் மூலம் நன்மை பெறும் பொதுமக்கள் சிறந்த வினைத்திறன் மிக்க துரிதமானதுமான சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கான சேவையினை கணணி மயப்படுத்தும் அங்குரார்ப்பண நிகழ்வின்போது முன்னாள் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி உள்ளிட்ட துறைசார் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours