(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு


ஊடகப் பண்புகள், ஊடக வழிகாட்டல்கள் மற்றும் கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றுதலின் நன்மையினை பொது மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தல் போன்ற மேலும் பல விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடலொன்று  Zoom  தொழில் நுட்பத்தினூடாக 25.03.2021 வியாழக்கிழமை இடம்பெற்றது.

புத்த சாசன அலுவல்கள் அமைச்சின் ஊடகச் செயலாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான திரு. ஜெயரஞ்சன் யோகராஜா அவர்களது தலைமையில் நடைபெற்ற  Zoom    ஊடான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலக ஊடகப் பிரிவின் மாவட்ட தகவல் அதிகாரி திரு. வடிவேல் ஜீவானந்தன் அவர்களது ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில்  மதகுருமார்களான சிவ ஸ்ரீ ஜெகதீஸ்வரன் குருக்கள், சிவ ஸ்ரீ சிவபாலன் குருக்கள் ஆகியோருடன் மௌலவி ஜவாஹீர், வைத்திய நிபுணர் தேவகாந்தன், சிரேஸ்ட ஊடகவியலாளர்களான எஸ்.தவபாலரெத்தினம், வீ.சக்திவேல், எம்.ஐ.எம். கமால்தீன் மற்றும் உ. உதயகாந்த் பொதுமக்கள் சார்பில் றிஸ்வான் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட பங்குபற்றுனர்களின் அறிமுகத்துடன் ஆரம்பமான கலந்துரையாடலில் முதலில் கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் தொடர்பாக சிரேஸ்ட ஊடகவியலாளர் திரு. ஜெயரஞ்சன் யோகராஜா அவர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில் ஊடக பண்புகள், செய்திகளை உருவாக்கும் விதம், சரியானதும் திருத்தமான தகவல்களை பெறும் இடங்கள், கொவிட் - 19 தொடர்பான ஊடக வழிகாட்டல்கள், தனிமைப்படுத்தல் சட்டம், தண்டனைக்குரிய குற்றங்கள் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது.

நண்பகல் 12.45 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடலானது சுமார் ஒரு மணித்தியாலங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours