(எம்.ஏ.றமீஸ்)

அரசாங்கத்தின் சுய நெல் விதை உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் பொத்துவில் பிரதேசத்தில் ஏ.ரி-362 எனும் நெல் இனத்தினை செய்கை பண்ணும் வகையில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வேலைத் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வேலைத் திட்டத்திற்கு அமைவாக, பொத்துவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு இந்நெல் இனம் தொடர்பான அறிவூட்டல் கருத்தரங்கும் நெல் விதைகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வும் பொத்துவில் விவசாய விரிவாக்கல் நிலையத்தில் இடம்பெற்றது.
விவசாய விரிவாக்கல் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.யோகநாதன் தலைமையில் இடம்பெற்ற இடம்பெற்ற இந்நிகழ்வின்போது அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு விதை நெல் இனத்தினை விவசாயிகளுக்கு சம்பிரதாய பூர்வமாக வழங்கி வைத்தார்.
பொத்துவில் பிரதேசத்தில் அதிகளவில் செய்கை பண்ணப்பட்டு வரும் நெல் இனங்களிலில் இருந்து ஏ.ரி-362 வகை நெல் இனத்தினை செய்கை பண்ணுவதன் மூலம் பலத்த காற்று, பெரு மழை போன்ற இயற்கை இடர்களுக்கு ஈடுகொடுத்து விவசாயிகளுக்கு அதிக விளைச்சலை இவ்வகை நெல் இனம் பெற்றுக் கொடுக்கும் என விவசாயத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் தற்காலத்தில் நெல் இனத்தினை அதிகளவில் தாக்கி வரும் கபில நிறத் தத்திகளின் தாக்கத்திற்கு ஈடு கொடுக்கவல்ல இவ்வகை நெல் இனம் குறித்த காலப் பகுதியில் குறித்த வளர்ச்சியில் காணப்படுவதனால் பல்வேறான இடர்களில் இருந்தும் பாதுகாக்கப்பட்டு விவசாயிகளுக்கு பாரிய வருமானத்தினையும் ஈட்டிக் கொடுக்கவல்லதுடன், இவ்வகை நெல் இன சிவப்பு அரிசி வகைகள் பல்வேறான நோயாளர்களுக்கு பொருத்தமான ஆகாரமாகவும்  அமைகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிகழ்வின்போது விவசாயப் போதனாசிரியர்களான என்.நஸ்லுன் சிதாறா, எஸ்.பாத்திமா றபீக்கா, கே.ஜெகநாதன் உள்ளிட்ட துறைசார் முக்கியஸ்தர்கள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours