(கல்லடி, வவுனதீவு நிருபர்கள்)
கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சரின் சுற்றறக்கைக்கு அமைவாக, கொவிட் கட்டுப்பாடுகளை கடுமையாக விதிக்கவேண்டிய தேவை எமக்கு இருக்கின்றதென மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.தயாபரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 25.04.2021 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
எமது மட்டக்களப்பு மாநகரசபை பிரிவில் பார்க்கின்றபோது இந்த கொவிட் 19 தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாங்கள் அவ்வளவு தூரம் மேற்கொள்ளவில்லையோ என்று சந்தேகத்துடன் எண்ணத்தோன்றுகின்றது. நேற்று வர்த்தக நிலையங்களிலும் பொது இடங்களிலும் கூடும் பொதுமக்கள் சமுக இடைவௌியை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக நிற்பதனை அவதானிக்க முடிந்தது. இது எமக்கும் இந் நாட்டிற்கும் ஒரு பாரதூரமான செயற்பாடாகும் எனவும் அவர் மேலும் கருத்துத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், வர்த்தக நிலையங்களில் ஒன்றுகூடும் பொதுமக்கள் அவர்கள் எந்தவிதமான முகக்கவசம் அணியாமலும் அல்லது சரியான முறையில் அணியாமலும், சமூக இடைவௌியை பின்பற்றாமலும் வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதை காணமுடிந்தது. அதேபோன்று பொது இடங்களான பஸ் நிலையம், பூங்காக்கள், ஆலயங்களில் ஒன்றுகூடும் மக்கள் இந்த விடயத்தை கவனத்தல் கொள்ளாமல் ஒன்று கூடுகின்றனர். எனவே இந்தவகையில் ஒன்றுகூடுவதால் கொவிட் 19 தொற்றுவதற்கு சாதகமான நிலையை தோற்றுவிக்கும். சுகாதாரப் பிரிவினரின் தகவலின்படி, மட்டக்களப்பிலே அண்மைக்காலமாக கொவிட் 19 தொற்று அவதானக்கப்பட்டிருக்கின்றது. அதில் சில மாணவர்களையும், அரசாங்க உத்தியோகத்தர்களையும், ஆசிரியர்களையும் பாதித்திருப்பததாக தகவல்கள் கூறுகின்றன.
எனவே இந்த நிலையிலே நாங்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவேண்டிய தேவை இருக்கின்றது. எங்களுடைய இந்த புதிய சுற்றறிக்கையின்படி நாங்கள் பொதுமக்களை அனாவசியமாக வீடுகளில் இருந்து வௌியே வரவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். குறிப்பாக ஒரு வீட்டில் இருந்து இரண்டுபேர் மாத்திரம் வருவது போதுமானதாக இருக்கும் இன அரசாங்கம் கருதுகின்றது.
நாங்கள் அவதானித்ததன்படி அதிகமான மக்கள் வர்த்தக நிலையங்களிலே ஒன்றுகூடுகின்றனர் அவர்கள், இந்த கொவிட் தொற்று ஏற்பட்டிருக்கின்றது நாடு முடக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம் எனும் வதந்திகளின் அடிப்படையில் அவ்வாறு ஒன்று கூடுவதற்கான காரணமாக இருக்கலாம், ஆனால் அரசாங்கத்தின் அறிக்கைகளின்படி அவ்வாறு நாட்டை முடக்குவதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லை ஆகையால் கடைகளில் முண்டியடித்துக்கொண்டு மக்கள் பொருட்களை கொள்வனவு செய்யவேண்டிய தேவை இல்லை.
வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு இதன்மூலம் சில அறிவித்தல்களை விடுக்கின்றோம். சகல வர்த்தக நிலையங்களிலும் 50 வீதத்திற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறு 50 வீதத்திற்கு மேல் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டால் அந்த அந்த வர்த்தக நிலையத்தின் உரிமம் இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளை மாநகர சபை மேற்கொள்ளும். மக்கள் வரிசையில் நின்று பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்கவேண்டியதுடன் கைகளை கழுவி, முகக்கவசம் சரியாக அணித்து வருபவர்களை மாத்திரம் இதற்கு அனுமதிக்க வேண்டும்.
மற்றும் மூடப்பட்ட அரங்குகள், கேளிக்கை நிலையங்கள், சிறுவர் பூங்காக்கள், நீச்சல் தடாகங்கள் போன்றவை மூடப்படுகின்றது இந்த இடங்களுக்கு சிறுவர்களை அழைத்துவரவேண்டாம் எனவும் அறியத்தருகின்றோம்.
அதேபோன்று திருமணத்திற்காக 150 பேருக்கு மேல் அனுமதிக்கப்படமாட்டார்கள் அதுவும் சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் இடம்பெறவேண்டும். அதேபோன்று ஆலயங்களின் உற்சவங்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் மாத்திரம் பொது சுகாதார பரிசோதகர், சுகாதார வைத்திய அதிகாரி போன்றோரின் கண்காணிப்பின்கீழ் நடைபெறவேண்டும்
இந்த கொவிட் 19 அலை வளர்ச்சியடைந்த வைரஸ் ஆக காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றது. எனவே நாங்கள் எங்களது சமூகத்திலே இதை பரவவிடாமல் தடுக்கவேண்டுமாக இருந்தால் எங்கள் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அவர்களுடைய அறிவுறுத்தல்களை பின்பற்றவேண்டியது மிக அவசியமாக இருக்கின்றது. எனவே வீண் வதந்திகளை நம்பவேண்டாம் எமது பாதுகாப்பை நாமே உறுதிப்படுத்திக்கொள்வோம். என அன்பாக கேட்டுக்கொள்கின்றேனென அவர் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours