(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு முதலைக்குடா மகாவித்தியாலயத்தை தரமுயர்த்துவதை தவிர்த்து இன்னொரு பாடசாலையை தரமுயர்த்துவதால் படுவான்கரையில் இருக்கின்ற கல்விச்சமூகத்தை முற்றுமுழுதாக குழிதோண்டி புதைக்கும் செயற்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.கல்விக்குள் அரசியலை புதைக்கும் செயற்பாட்டை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.அதனை ஒட்டுமொத்த படுவான்கரை மக்கள்,புத்திஜீவிகள்,சமூக ஆர்வலர்கள் கண்டிக்கின்றோம் என முதலைக்குடா மகாவித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர்,பழைய மாணவர் சங்கத்தினர் தெரிவிப்பு.
மட்டக்களப்பு முதலைக்குடா மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை(30) காலை 10.00மணியளவில் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்றது.இவ் ஊடக சந்திப்பில் முதலைக்குடா மகாவித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சங்கச்செயலாளர் சிவலிங்கம் பரமேஸ்வரன்,மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் கோணலிங்கம் கலைராஜ்,பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர் கோ.தனுசியன் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்கள்.
அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்..இந்த நாட்டிலே உண்மையாக ஒரு சிறப்பான ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.பலவகையான அபிவிருத்தி திட்டங்களை நாட்டிலே புதிய அரசாங்கம் நாட்டுமக்களின் நன்மைகருதி முன்னெடுத்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்திலே கல்விரீதியாக தமிழ்சமூகம் வளர்ச்சி காணவேண்டும் எனும் நோக்கில் மாண்புமிகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும்,அமைச்சருமான பஷில்ராஜபக்ஷ ஆகியோர்களின் சிறப்பான திட்டமிடல்களுடன் இந்த நாட்டிலே சிறப்பான ஆட்சி நிலவிக்கொண்டிருக்கும் இச்சந்தரர்ப்பத்தில் தமிழ்சமூகத்தின் கல்விவளர்ச்சியானது கருகதியான முறையில் வளர்ச்சியடைய வேண்டும் எனும் பெருமதியான தூரநோக்கில் நாட்டிலே ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் ஆயிரம் பாடசாலைகள் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு நாடுபூராகவும் உள்ள பிரதேசங்களில் தேசியபாடசாலைகள் உருவாக்கும் அவ்வேலைத்திட்டம் இடம்பெற்றுவருகின்றது.
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 7பாடசாலைகளை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பாடசாலைகளின் பெயர்பட்டியலில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள மண்முனை தென்மேற்கு பட்டிப்பளைகோட்டத்தில் உள்ள முதலைக்குடா மாகாவித்தியாலய பாடசாலைக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதை ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்தி இழைக்கப்பட்ட அநீதிக்கு சிறப்பான நீதியைப்பெறுவதற்கு இவ்ஊடக சந்திப்புக்கு இங்கு வருகைதந்துள்ளோம்.
மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை கோட்டத்தில் முதன்மையான 1AB பாடசாலையாக முதலைக்குடா மகாவித்தியாலயம் திகழ்கின்றது.இங்கு கணிதம்,விஞ்ஞானம்,கலை,வர்த்தகம்,தொழில்நுட்ப பிரிவு போன்ற துறைகள் எமது பாடசாலையில் இருக்கின்றது.கடந்த வருடம் எமது பாடசாலையில் 26பேர் பல்கலைக்கழகத்திற்கும்,மற்றும் கல்வியக்கல்லூரிக்கும் சென்றுள்ளார்கள்.இவ்வாறான கல்வி அபிவிருத்தியையும்,புகழையும் எமது பாடசாலைக்கும்,எமது படுவான்கரை மண்ணுக்கும் ஈட்டித்தருகின்றமை எமது தமிழ்சமூகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வளமாகும்.மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை கோட்டத்தில் மூன்று பாடசாலைகள் 1AB பாடசாலைகள் இருக்கின்ற போதிலும் தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்குரிய கல்வி அமைச்சின் சுற்றுநிரூபத்தின் அமைவாக முதன்மையான பாடசாலையாக முதலைக்குடா மகாவித்தியாலயம் திகழ்கின்றது.இருந்தபோதிலும் தற்போது வெளியாகிய தேசியபாடசாலை பெயர்ப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள பாடசாலை ஒன்றை தேசியபாடசாலையாக தரமுயர்த்துவதில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலை மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர்,மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் மற்றும் மாவட்ட அரசியல்வாதிகள் கவனம் செலுத்துவதோடு தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்குரிய கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்தின்படி எமது முதலைக்குடா மகாவித்தியாலயம்தான் முதன்மையாக காணப்படுகின்றதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
எமது பாடசாலையை தரமுயர்த்துவதை தவிர்த்து இன்னொரு பாடசாலையை தரமுயர்த்துவதால் படுவான்கரையில் இருக்கின்ற கல்விச்சமூகத்தை முற்றுமுழுதாக குழிதோண்டி புதைக்கும் செயற்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.கல்விக்குள் அரசியலை புதைக்கும் செயற்பாட்டை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.அதனை ஒட்டுமொத்த படுவான்கரை மக்கள்,புத்திஜீவிகள்,சமூக ஆர்வலர்கள் கண்டிக்கின்றோம்.இவ்விடயமாக நாங்கள் வலயமட்டத்திலும்,மாகாணமட்டத்திலும்,தேசியமட்டத்திலும் உரிய அதிகாரிகள் ஊடாக தெரியப்படுத்தியுள்ளோம்.இதற்குரிய பொறுப்புவாய்ந்த அதிகாரிகள்,கல்வி அமைச்சு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கல்வி அமைச்சர் போன்றோர்கள் எங்கள் பாடசாலையை தரமுயர்த்தி தருவதாக ஆற்றுப்படுத்திய கடிதம் எங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.எனவே கல்விக்குள் அரசியலை புகுத்தி எங்கள் பாடசாலையை தேசியபாடசாலையாக தரமுயர்த்தும் பட்டியலில் நீக்கிவிடுவதற்கு அரசியலை புகுத்த வேண்டாம் எனவும்,நாட்டிலே கல்விச்சமூகத்தை அழித்துவிடவேண்டாம் எனவும் நாட்டில் உள்ள இளையோருக்கு கல்வியை ஊட்டி நல்லதொரு கல்விச்சமூகத்தை உருவாக்குவதற்கு தங்களின் பணிவான நல்லெண்ணங்களை எங்களுக்கு தாருங்கள் என கோரிக்கையை முன்வைக்கின்றோம் எனத்தெரிவித்தார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours