(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 நாட்களில் 190 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் ஒரு வாரத்தில் 143 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (05) காலை நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது அலையில் 14 நாட்களில் 190 பேர் தொற்றுக்குள்ளானதாகவும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 143 பேர் கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொவிட் சிகிச்சை நிலையங்கள் முற்றுமுழுதாக நிரம்பியுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்காணப்படும் கொரனா தொற்றாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பவேண்டிய நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 30 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களின் 12 பேர் களுவாஞ்சிகுடியிலும் 09 பேர் மட்டக்களப்பிலும் 05 பேர் செங்கலடி பகுதியிலும் 04 பேர் காத்தான்குடியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1173 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இவர்களின் 1020 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.
கொவிட் தொற்றாளர்கள் தீவிரமான நிலையினையடைந்து நியுமோனியாவுக்கு தள்ளப்படும்போது அவர்களை பராமரிப்பதற்காக காத்தான்குடி, களுவாஞ்சிகுடி, வாழைச்சேனை போன்ற வைத்தியசாலைகளில் எச்யு மற்றும் ஐசியு ஆகியவற்றினையும் நிறுவவுள்ளோம்.அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

Post A Comment:
0 comments so far,add yours