பைஷல் இஸ்மாயில் -
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாதின் கைதின் பின்னணியில் 20க்கு கையுயர்த்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்களா? என்ற சந்தேகம் எனக்குள் இருக்கிறது என்றும் சரிந்த செல்வாக்கை மீள கட்டியெழுப்ப வேண்டும் என்ற பின்னணியுடன் தான் ரிஷாத்தின் கைது நடந்திருக்குமா என சந்தேகிக்கிறேன் என்று நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் அஸ்ரப் தாஹிர் கேள்வி எழுப்பினார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றிரவு (12) நிந்தவூரில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ரிஷாத்தின் கைது தொடர்பில் சட்ட ரீதியான பிரச்சினைகளை அணுகவேண்டிய காரணத்தினாலேயே கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரான சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட்டை பதில் தலைவராக தற்காலியமாக நியமித்து அவருக்கான அதிகாரங்களை வழங்கினோம். இதில் வேறு எவ்வித உள்நோக்கங்களுமில்லை.
அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு அதிகமாக வாக்களித்த மக்கள் அம்பாறை மாவட்ட மக்களே. இங்கு கட்சிக்கென்று நிர்வாக கட்டமைப்பு இருக்கிறது. அத்துடன் மாவட்ட செயற்குழுவுள்ளது. அதனுடன் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் இணைந்து பணியாற்றாமல், அந்த செயற்குழுவுடன் கலந்துரையாடாமல் தனது விருப்பத்தின் பிரகாரம் நடந்துகொள்ள முயற்சிப்பது முறையற்ற செயலாகும். பொறுத்துவாய்ந்த ஒருவர் அவ்வாறு நடந்துகொண்டு அறிவிப்புக்களை விடுவது நல்லதல்ல.
கலந்தாலோசனைகள், தலைமைத்துவ வழிகாட்டல்களை பின்பற்றாமல் எந்தவித போராட்டங்களும் வென்றதாக வரலாறுகள் இல்லை. தலைவரை விடுவிக்க போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால் புனிதமான நோன்புப் பெருநாளை எதிர்ப்பு நாளாக மாற்றுவது முறையல்ல என்றார்.
எது எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரபுக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினரும், அக்கட்சியின் உயர்பீடமும் ரிஷாத்தின் கைதுக்கு எதிராக கருப்புக் கொடி கட்டுவற்குப் பதிலாக போர்க் கொடி தூக்கி வருகின்றனர் என்பது மட்டும் தெட்டத் தெளிவான உண்மையாகும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் முஷாரபுக்கு எதிராக ஆரம்பித்துள்ள இந்தப் போராட்டம் கட்சியின் தலைமையை இன்னும் சிறையில் வைத்திருக்க ஏதுவாக அமையுமே தவிர, அவரின் விடுதலையை தூண்டும் செயற்பாடாக அமையாது.
தற்போது ரிஷாத்தின் கைது விடயம் மற்றும் அவரின் விடுதலைக்காக எடுக்கும் முயற்சி போன்றவற்றை அக்கட்சியும், அதன் உயர்பீட உறுப்பினர்களும் மறந்து, முஷாரபுக்கு எதிரான போராட்டத்தையும், போர்க் கொடியையும் தற்போது கையில் எடுத்துக் கொண்டு தங்களின் வாய்க்கு வந்த கருத்துக்களை வெளியிட்டு வருவதுடன், தலைவரின் விடுதலைக்காக பாடு படாமல் முஷாரபின் செயற்பாட்டில் பிழை காண்பதற்காகவே தங்களின் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற விடயம் வெட்கக் கேடானதாகும்.

Post A Comment:
0 comments so far,add yours