(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கையின் போது நஞ்சற்ற உற்பத்திகளை உற்பத்தி செய்வதன்மூலம் எதிர்காலத்தில் நோயற்ற,சுகதேகியான ஆரோக்கியமான சிறந்தோர் சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் இத்திட்டத்தை இவ்வாண்டு  அமுல்படுத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் கொள்கை திட்டத்தின்படி நாட்டிலே உற்பத்தி செய்யப்படுகின்ற விவசாய உற்பத்திப் பொருட்களை நஞ்சற்றவையாக உற்பத்தி செய்வதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்ததோர் சமூகத்தை உருவாக்க முடியும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்திட்டமானது இவ்வாண்டு பெரும்போக நெற்செய்கையின் போது அமுல்படுத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று ஞாயிற்றுகிழமை (02)காலை நடைபெற்ற கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

மேலும்  துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும்போது மேலும் தெரிவிக்கையில்...

எதிர்காலத்தில் எமது சமுதாயத்தில்  சிறந்த பிரஜைகளை உருவாக்குவது நம் எல்லோரினதும் கைகளில் இருக்கின்றது. இதற்காக ஜனாதிபதி முழு முயற்சியையும் மேற்கொண்டு வருவதாகவும் ,அதற்காக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகின்ற இராசாயனப் பொருட்களை தடைசெய்து சேதனப்பசளை மற்றும் எண்ணெய் வகைகளை பயன்படுத்த வேண்டும் அதற்காக துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகள் தங்கள் திட்டங்களையும், கருத்துக்களையும் எதிர்வரும் ஆறு வாரங்களுக்குள் முன்வைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

விவசாயத் துறை சார்ந்த அமைப்புகள் ,அதிகாரிகள் தங்களது கருத்துக்களை முன்வைத்த போது குறித்த காலத்துக்குள் அறிக்கைகளை தயாரித்து அரச அதிபர் ஊடாக தமக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அரச அதிபர் க.கருணாகரன்,மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந் , பிரதேச செயலாளர்கள்,உள்ளூராட்சி தவிசாளர்கள்,விவசாயத் திணைக்கள அதிகாரிகள், அபிவிருத்தி குழு  இணைப்பாளர்கள்,விவசாய அமைப்புக்கள், சேதனப்பசளை உற்பத்தியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours