(அஸ்லம் எஸ்.மௌலானாறாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்)
உஸ்தாத் அஷ்ஷெய்க் எம்.ஐ.அப்துல் காதர் (மிஸ்பாஹி) அவர்கள் இன்று 03-06-2021ஆம் திகதி, தனது 72ஆவது வயதில் வபாதானதையிட்டு அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆழ்ந்த கவலையடைகின்றது. இவர் 1949-02-02ஆம் திகதி, முஹம்மது இப்றாஹிம், மர்யம்கன்டு ஆகிய தம்பதிகளுக்கு புதல்வராக பிறந்து தனது பாடசாலைக் கல்வியை சம்மாந்துறை அல்-மர்ஜான் வித்தியாலயத்தில் கற்றுவிட்டு, மார்க்க கல்வியை தென்னிந்தியா நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அறபுக் கல்லூரியில் கற்று, 1975ஆம் ஆண்டு மௌலவி பட்டம் பெற்று வெளியேறினார். பின்னர் ரியாத் மலிக் ஸஊத் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து பட்டதாரியாகவும் வெளியேறினார்.
1976ஆம் ஆண்டு அஜ்ஜு முகம்மது ஸல்மா என்பவரைத் திருமணம் முடித்து குடும்ப பந்தத்தில் இணைந்துகொண்ட இவர், 11 பிள்ளைகளுக்கு தந்தையானார்.
உஸ்தாத் அஷ்ஷெய்க் எம்.ஐ. அப்துல் காதர் (மிஸ்பாஹி) அவர்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வா குழு உறுப்பினராகவும், 2013 தொடக்கம் 2019 வரை சம்மாந்துறை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராகவும் செயற்பட்டதுடன், நீண்ட காலம் தொட்டு தொடர்ச்சியாக அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக செயற்பட்டுவந்தார். இவர் மாவட்ட சபைக் கூட்டங்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் தவறாமல் சமூகமளிக்கும் கடமையுணர்வைக்கொண்டிருந்தார். கூட்டக்களில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு கட்டுப்படுவதுடன், அடக்கமாகவும் பணிவாகவும் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் நல்கிவந்தார்.
சமயம்,சமூகம்,கல்வி சார்ந்த விடயங்களில் உஸ்தாத் அஷ்ஷெய்க் எம்.ஐ. அப்துல் காதர் (மிஸ்பாஹி) அவர்கள் மிகுந்த அக்கறை காட்டிவந்துள்ளார்கள். இந்தவகையில் அவர், விவாகப் பதிவாளராகவும், ஸகாத் நிதியத்தின் தலைவராகவும், கதீபாகவும், சம்மாந்துறை மத்தியஸ்த்த சபையின் உறுப்பினராகவும், சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் அதிபராகவும் பிரதி அதிபராகவும் நீண்ட காலமாக விரிவுரையாளராகவும் கடமையாற்றி வந்தார். இவர் இஸ்லாமிய சட்டத்துறையில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்ததால் இவரிடம் கல்வி கற்ற பல நூறு மாணவர்கள் இவரின் சட்ட புலமையிலிருந்து கூடுதலான அறிவுகளைப் பெற்றமை விசேட சிறப்பம்சமாகும்.
உஸ்தாத் அஷ்ஷெய்க் எம்.ஐ.அப்துல் காதர் (மிஸ்பாஹி) அவர்கள் தன்னிகரில்லா சிறப்பம்சங்கள், பண்புகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தார். இறையச்சம், பேணுதல், அடக்கம், பணிவு, மன்னித்தல், மன்னிப்புக் கோரல், அன்பு, ஆதரிப்பு, பொறுமை, குடும்ப உறவுகளைப் பேணல் ஆகிய சில பண்புகள் எடுத்துக் காட்டுக்குரியனவாகும்.
அன்னாரின் பிரிவால் துயருறும் அவரின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் ஆறுதலை அளிக்குமாறும் அன்னாரது சமய, சமூக, கல்வி, கலாசார விவகாரங்களில் அவர் காட்டிய தியாகம், அர்ப்பணிப்புக்களை அங்கீகரித்து ஜன்னதுல் பிர்தௌஸை கொடுத்தருளுமாறும் அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா பிரார்த்திக்கின்றது.

Post A Comment:
0 comments so far,add yours