(வெல்லாவெளி தினகரன்-க.விஜயரெத்தினம்)


கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் கிளித்தெறிந்துவிட்டு பதவி விலகவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் க.உதயரூபன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் திங்கட்கிழமை(12) 1.00 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 30 தோழர்கள், கடந்த 8ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு முன்பாக இலங்கையின் இலவசக் கல்வியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் போராட்டத்தில் குதித்தபோது தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விடுதலையான பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களது விடுதலையை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று நாடுமுழுவதும் பல்வேறு பணிகளிலிருந்து விலகியிருப்பதாக எங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இணையவழி கற்கைச் செயற்பாடு, இணையவழி ஊடான உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப வேலைத்திட்டம், பிராந்திய கற்கைநெறிச் செயற்பாட்டு போன்றவற்றிலிருந்து விலகியிருக்கின்றனர்.

இலங்கையின் இலவசக் கல்வியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அர்ப்பணிப்புடன் அதிபர்கள், ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்ற நிலையில் அவர்களின் சம்பள முரண்பாடு, சம்பள உயர்ச்சியை அதிகரித்தல் போன்ற போராட்டங்களை நாடு முழுவதும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வந்தன.

1994ஆம் ஆண்டிலிருந்து பொருத்தமான சம்பளம் இல்லாமல் தமது கடமைகளை சிறப்பாக முன்னெடுத்துவரும் அதிபர், ஆசிரியர்களின் செயற்பாடுகளை முறியடிக்கவேண்டும், அவர்களின் உரிமையினை முறியடிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இந்தக் கைதுகள் நடைபெறுகின்றன.

கடந்த காலத்தில் சம்பள அதிகரிப்பைக் கோரி பல இடங்களில் போராட்டங்களை நடாத்தினோம். பெரும்பாலான அதிபர்கள், ஆசிரியர்கள் இந்த நியாயமான போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த காரணத்தினால் அதனைக்கண்டு இந்த அரசாங்கம் அச்சமடைந்தது.

இக்கால கட்டத்தில் மாணவர்களுக்கு எந்த கல்வி நடவடிக்கைகளையும் முன்னெடுக்காத, கல்விக்கொள்கையில் தோல்வியடைந்த இந்த அரசாங்கம், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளை கைதுசெய்துவிட்டு அதிபர், ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு கோரிக்கையினை முறியடிக்கவேண்டும் என்ற வகையில் இந்த செயற்படுகின்றது.

எதிர்கால எமது சந்ததிக்கு சவாலாகவுள்ள இந்தச் சட்ட மூலத்துக்கு எதிராகவே நாங்கள் வீதிகளிலிறங்கிப் போராடிவருகின்றோம் என்பதை பெற்றோர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இந்த நாட்டிலே போதைவஸ்து தொழிலிலும், போதைப்பொருள் பாவனையிலும், பல்வேறு கொலைக் குற்றச்சாட்டுக்களிலும் ஈடுபட்டவர்கள் வெளியே அரசியல்வாதிகளாக திகழ்கின்றனர்.

ஆனால் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு இலவசக்கல்வியை மேம்படுத்தும் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்ககோரி போராடியதால் கைது செய்யப்பட்டு விடுதலையாக்கி பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர் தொழிற்சங்க தலைவரை உடனடியாக அரசாங்கம் விடுவிக்க வேண்டும். இதற்கான முழுப்பொறுப்பையும் கல்வி அமைச்சர் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத்தெரிவித்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours