(அஸ்லம் எஸ்.மௌலானா)


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்படி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை எட்டாக (08) அதிகரித்துள்ள அதேவேளை கல்முனைப் பிராந்தியத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சாய்ந்தமருது-17, தண்டையல் வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவரே நேற்று (02) உயிரிழந்துள்ளார் என பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் இதுவரை 133 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுள் தற்போது 11 பேர் கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 48 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 1014 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனையும் 1120 பேருக்கு ரெபிட் அன்டிஜன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் மேலும் தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours