-க.விஜயரெத்தினம்)


தங்கச்சங்கிலியை கொடுக்க மறுத்த தாயாரின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்த மகன்.மட்டு. செங்கலடியில் சம்பவம்.45 வயதான மகன் கைது.

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலிலுள்ள செங்கலடி குமாரவேலிய கிராமத்தில் தனது தாயாரின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்த 45 வயதான மகனைக் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், குமாரவேலிய கிராமத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பொன்னுத்துரை தவமணி என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிபதாயார் அவரது மகளுடன் வாழ்ந்துவரும் நிலையில், சம்பவதினமான இன்று பிற்பகல் 3.30 மணியளவில் தாயாரின் வீட்டுக்கு சென்ற மகன், தாயாரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கேட்டு சண்டை பிடித்துள்ளார்.

தாயார் சங்கிலியை கொடுக்க மறுத்துள்ளார், மகனுக்கும் தாயாருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து அங்கிருந்த கத்தியால் தாயாரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து  மகனைக் கைது செய்ததுடன், சம்பவ இடத்திற்கு நீதவான் சென்று சடலத்தை  பார்வையிட்டதன் பின்னர் வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஏறாவூர் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours