எஸ்.சபேசன்



நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த 2008,ல் என்னை வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத தடை ஏற்பட்டபோது அந்த தடையை முறியடித்து வெற்றிகண்ட வழக்கறிஞர் அமரர்கௌரி சங்கர் தவராசா அவர்கள் அவர்களின் பேரிழப்பு ஈடுசெய்ய முடியாது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்,

கொரோணா நோய்தாக்கத்தால் உயிர்நீத்த சிரேஷ்ட வழக்கறிஞர் திருமதி கௌரி சங்கர் தவராசா மறைவு தொடர்பான அனுதாபச்செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்.

கொழும்பு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் கே.வி.தவராசா அவர்களின் துணைவியார் அமரர் கௌரி சங்கர் தவராசா அவர்களை எனக்கு 2008, ம் ஆண்டுதான் முதல் முதலில் சந்தித்தேன்.

அப்போது நான் 2004 பொதுத்தேர்தலில் 22, பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக தெரிவான போது புலம்பெயர் நாடுகளில் பல அரசியல் பயணங்களை மேற்கொண்டிருந்தேன்.

2008, ல் ஜேர்மணி நாட்டில் பொங்குதமிழ் நிகழ்வொன்றில் நான் உரையாற்றிய பேச்சு தொடர்பாக இலங்கை புலனாய்வு திணைக்களத்தில் 4,ம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டேன் விசாரணை எட்டு மணித்தியாலங்கள் இடம்பெற்றன அதில் நான் புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர் மத்தியில் உரையாற்றிய வீ.டீ.ஓ ஒளிப்பேழையை இயக்கியபடி நான் தனிநாட்டுக்கு ஆதரவாக பேசியதாக விசாரணை செய்யப்பட்டேன்.

அதன்பின்னர் ஒருவாரத்தால் வேறொரு நாட்டுக்கு செல்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு சென்றபோது எனது கடவுச்சீட்டு வெளிநாடுகள் போக முடியாதவாறு தடையுள்ளதாக திருப்பிஅனுப்பப்பட்டேன்.

அதனை அடுத்து இரண்டு நாட்களால் எனக்கு கொழும்பு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிந்தேன் உடனே என்னை சக பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை அண்ணர், தங்கேஷ்வரி அக்கா, செல்வம் அடைக்கலநாதன், சிவநாதன் கிஷோர் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் சட்டத்தரணி கௌரி சங்கர் வீட்டுக்கு அழைத்துச்சென்று விபரங்களை எடுத்துரைத்தோம்.

கௌரி சங்கர் அவர்களும் கணவர் கே.வி.தவராசா அவர்களும் புலம்பெயர் தேசத்தில் பொங்குதமிழ் நிகழ்வில் நான்பேசிய பேச்சின் ஒளிப்பேழை ஒன்றை தரமுடியுமா என கேட்டனர் அதை சில தினங களால் பெற்றுக்கொடுத்தேன் அதை இவர்கள் இருவரும் கேட்டு விட்டு வழக்கில் எதிர்கொள்வோம் பயப்படவேண்டாம் என எனக்கு தைரியம் தந்தனர்.

வழக்கில் இரண்டாவது தவணையில் 2008,டிசம்பர் மாதம் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு நான் மீண்டும் வெளிநாடுகள் செல்வதற்கான அனுமதி கிடைத்தத்துடன் குற்றமற்றவர் என வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

தீர்ப்பு அறிவித்து மறுநாள் மாவை அண்ணரும் செல்வம் அடைக்கலநாதனும் கஜேந்நிரகுமார் பொன்னம்பலும், சிவநாதன் கிஷோரும் நானும் அவரின் இல்லத்திற்குச்சென்று நன்றியறிதலை தெரிவித்து விட்டு மாவை அண்ணன் கௌரிசங்கர அவர்களையும் கே.வி.தவராசா அவர்களையும் தனியாக அவர்களிடம் வழக்குக்கான செலவுகள் எவ வளவு என கேட்டார் உடனே கௌரி சங்கர் அவர்களும் அவரின் கணவர் கே.வி. தவராசா அவர்களும் இரண்டு கைகளையும் கூப்பி வணங்கி மாவை அண்ணரிடம் எந்தப்பணமும் வேண்டாம் இது தமிழ்தேசியத்திற்கு நாம் செய்யும் பணி என கூறினர்.

அந்த வழக்கை தாம் எவ்வாறு எதிர்கொண்டோம் என்பதையும் கூறினர் அதாவது இலங்கையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் இலங்கை அரசின் அமைச்சர் சந்திரசேகரம் உள்நாட்டில் உரையாற்ற முடியுமானால் இலங்கைக்கு வெளியே ஒருபாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுவது தவறு என வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பின் உள்நாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சருக்கு ஏன் வழக்கு தாக்கல் செய்யவில்லை என்ற வாதத்தை முன்னிறுத்தி இந்த வழக்கை முறியடித்ததாக தெரிவித்திருந்தனர்.

அன்று தொடக்கம் எனக்கு பலதடவை குற்றப்புலனாய்வு 4,ம் மாடியில் பாராளுமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாத போதும் எட்டுத்தடவைகள் விசாரணை இடம்பெற்றன எட்டுத்தடவைகளும் கொழும்பு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அவர்கள் என்னை அங்கு அழைத்து சென்றதை மறக்கமுடியாது.

ஒருதடவை இலங்கை தமிழரசுகட்சி மத்தியகுழுக்கூட்டம் கொழும்பில் சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களின் வீட்டில் இடம்பெற்றபோது அமரர் கௌரி சங்கர் தவராசா அவர்கள் எம்மை உபசரித்து அனைவருக்கும் மதிய விருந்துசாரத்தை மேற்கொண்டு அன்பாக பழகியதையும் இந்த வேளையில் மறக்கமுடியாது.

பல பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதானவர்களை வாதாடி விடுதலை பெற்றுக்கொடுத்தவரலாறுகள் எண்ணில் அடங்காது இன்று 63, அகவையில் கொடிய கொரோணா வைரஷ் தாக்கத்தால் அவரை காலன் எடுத்தார் அன்னாரின் பிரிவு பேரிழப்பாகும் இந்தவேளையில் அன்னாரின் கணவர் சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக அறிகிறோம் அன்னாரும் பூரண குணமடைய பிரார்த்திப்பதுடன் இறைபதம் அடைந்த கௌரி சங்கர் அம்மையாருக்கு எமது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகளை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சார்பாகவும் எமது குடும்மபம் சார்பாகவும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours