துதி
அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவது, சர்வதேசத்திடம் முறையிடுவது மாத்திரம் எங்களைப் போன்ற அரசியல்வாதிகளின் செயற்பாடு அல்ல. உடைந்துபோயுள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி, நம்பிக்கையிழந்துள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்புகின்ற மிகப் பிரதானமான பொறுப்பிற்காகவே மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற செழுமைமிக்க 100 நகரங்கள் செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களிலே எமது மட்டக்களப்பு நகரத்தை ரசிக்க முடியாத சூழல் இருந்தது. இன்று மெல்ல மெல்ல அழகிய நகரமாக மாறி வருகின்றது. இருப்பினும் இயற்கை எழில் கொஞ்சும் அழகு கட்டிடங்களால் அழகுபடுத்தப்பட்டாலும், முடிந்தவரை இயற்கையான வளங்களை ரசிக்கும் இடமாக மாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உண்டு. தற்போதைய நிலையில் வாவியோரங்கள் கட்டிடங்களால் நிரப்பப்பட்டு மட்டக்களப்பு வாவியழகே மறைந்துள்ள நிலையில் ஊறனி பகுதியிலாவது மட்டக்களப்பு வாவியின் அழகு தெரியக் கூடிய வகையில் ஏற்பாடு செய்ய வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு.
அவ்வாறில்லாவிடில் இந்த இடங்களும் காணிக் கொள்ளையர்களால் அபகரிக்கப்பட்டு கட்டிடம் கட்டும் சூழல் உருவாகிவிடும். எனவே இதனை சரியான முறையில் பராமரித்து எமது எதிர்கால சந்ததிக்கு வழங்க வேண்டிய பொறுப்பு எங்களுக்குண்டு.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் இந்த நாட்டைப் பொறுப்பேற்றதில் இருந்து கொரொனா நிலைமை. பாராளுமன்றம் தொடங்கி ஒருவருட காலம் முடிந்தும் கொரோனா நிலைமை முடிந்தபாடில்லை. தற்போது கூட தனிமைப்படுத்தல் சட்டத்தில் நாட்டை முடக்கியிருக்கின்ற சூழலிலேயே இந்த நிகழ்வு நடைபெறுகின்றது.
நாட்டில் கொவிட் நிலைமையால் பொருளாதாரப் பிரச்சினை, மக்களுக்குப் பஞ்சம். இந்த நிலையில் இதனை ஏன் ஆரம்பிக்கின்றார்கள் என்ற விமர்சனமும் வரலாம். ஆனால் ஒரு அரசாங்கத்தின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் எங்களுக்கிருக்கின்றது. கொவிட் தடையாக இல்லாவிட்டால் அடுத்த ஆண்டிலே பலவிதமான மாற்றங்களை இந்த மாவட்டத்திலே செய்து முடிக்க முடியும் என்று நாங்கள் நம்புகின்றோம்.
இருந்தாலும் எம்மை விமர்சிப்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். செழுமையான 100 நகரங்கள் திட்டத்திலே மட்டக்களப்பில் இரண்டு நகரங்களும், சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தில் பல அபிவிருத்தித் திட்ங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான கொவிட் சூழலில் அரசாங்கம் மக்களுக்கான முதலீடுகளைச் செய்வதென்பது பெரியவிடயமாகும்.
ஊடகங்கள் என்ற அடிப்படையில் ஆங்காங்கே நடக்கின்ற விரும்பத்தகாத செய்திகளை முன்னிலைப்படுத்துவது போல எவ்வளவோ கடினமான சூழலிலும் மட்டக்களப்பில் இடம்பெறுகின்ற அபிவிருத்திப் பணிகளை முன்கொண்டு செல்வது தொடர்பிலான செய்திகளையும் மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
கடந்த சில நாட்களாக ஊடகங்களில் அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தை வைத்து பெரிதாகப் பேசப்படுகின்றது. உண்மையில் நானும் சிறைச்சாலையில் இருந்தவன் என்ற அடிப்படையில் அவர்களின் உள்ளக் குழுறலை அறிவேன்.
அந்தவகையில் சிறைச்சாலைக்குரிய ஒரு அமைச்சர் சென்று அவ்வாறான அசம்பாவிதத்தை நடத்தியிருந்தால் அது மிகப் பெரிய பிழை. கண்டிக்கப்பட வேண்டிய விடயம். நாங்களும் அதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஆனால் எங்களில் சிலரின் நிலைப்பாடு என்னவென்றால் நாங்கள் இவற்றைக் கண்டு வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றோம் என்று. நிச்சயமாக அரசாங்கம் அவ்வாறு இராது. அதற்கான விசாரணை நடக்கின்றது. அமைச்சர் தன் பதவியை இராஜினாமா செய்துள்ளார். நிச்சயமாக அந்த விசாரணை சரியாக இடம்பெறும். இந்த விடயத்தை நாங்களும் வன்மையாக எதிர்க்கின்றோம். அரசாங்கத்துக்குள் இருந்து எங்கள் எதிர்ப்பைக் காட்டுவோம்.
ஆகையால் அந்த ஒரு விடயத்தை வைத்து இந்த நாட்டில் சிந்தனை ரீதியில் குழப்பம் விளைவிக்க எண்ணுபவர்கள் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவதும், சர்வதேசத்திடம் முறையிடுவதுமாக இருக்கின்றார்கள். அது மாத்திரம் எங்களைப் போன்ற அரசியல்வாதிகளின் செயற்பாடு அல்ல. உடைந்துபோயுள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி, நம்பிக்கையிழந்துள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்புகின்ற மிகப் பிரதானமான பொறுப்பிற்காகவே மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். அதனை செவ்வனே நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எனக்குண்டு என்று தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours