(க.விஜயரெத்தினம்)


கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரின் சுற்று நிரூபத்திற்கு அமைவாக எதிர்வரும்  21 ஆம் திகதி தரம் ஒன்று(1)தொடக்கம்-ஐந்து(5) வரையான 200 குறைவான மாணவர்களை கொண்டுள்ள பாடசாலைகள் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில்  பட்டிருப்பு கல்வி வலயத்தில்  உள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி வித்தியாலயம் கற்றல் நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் பாடசாலை சூழல் துப்பரவற்ற  நிலையில் காணப்பட்டும், டெங்கு பரவக்கூடிய வாய்ப்பாகவும் காணப்பட்டதையடுத்து தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டு பாடசாலை சூழலை அவதானித்தும் கவனத்தில் எடுத்தும்,அவற்றை சுத்தப்படுத்தும் நோக்கிலும் , நோய்தொற்று  பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை(10)காலை  பாடசாலை வளாகம் பாரிய சிரமதான பணிகள் இடம்பெற்று துப்பரவு செய்யப்பட்டது.

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் களுதாவளை பிரதேச சபை உறுப்பினர் த.சுதாகரனின் ஏற்பாட்டிலும்,தலைமையிலும் கோட்டைக்கல்லாறு கண்ணகி வித்தியாலய  பாடசாலை வளாகம்,மலசலகூடம் மற்றும் வகுப்பறைகள்  துப்பரவு செய்யும் பணிகள் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கோட்டைக்கல்லாறு கண்ணகி வித்தியாலய அதிபர் பீ.சீவரெத்தினம்,தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கிராமியத்தலைவர்கள்,மகளீர்கள்,கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும்  மாணவர்களின் பெற்றோர்கள் என்பவர்களின் பங்களிப்புடன் வித்தியாலய  மாணவர்களின்  சுகாதார பாதுகாப்பு  நடவடிக்கைகளுக்காக பாடசாலை வளாகம் மற்றும் வகுப்பறைகள் துப்பரவு செய்யும்  பணிகள் இடம்பெற்றதோடு குப்பைகளை களுதாவளை பிரதேச சபையின் அனுமதியுடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours