(றாசிக் நபாயிஸ்,
மருதமுனை நிருபர்)


சர்வதேச அனர்த்த அபாய குறைப்பு தினம்  ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 13ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.

மேற்படி விடயம் தொடர்பாக, காலனிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் விளைவாக பல்வேறு வகையான இயற்கை அனர்த்தங்களை உலக நாடுகள் எதிர்நோக்கி வருகின்றன. இதன் காரணமாக மனித உயிர்கள்,  உட்கட்டுமானங்கள், பொருளாதாரம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் என்பனவற்றில் பாரிய அழிவை ஏற்படுத்தியதன் விளைவாக உலக நாடுகள் பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளதுடன் ஆசியா மற்றும் பசுபிக் நாடுகள் மிகவும் மிக மோசமாகக் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதற்கு இலங்கையானது விதிவிலக்கல்ல என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

உலகலாவிய காலநிலை இடர் குறியீடு 2019 இன் படி இயற்கை அனர்த்த நிகழ்வுகளின் படி இலங்கையானது 2ஆம் இடத்துக்கு உள்வாங்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணம் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்திச் செயற்பாடுகளில் அனர்த்த அபாய குறைப்பு சுற்றுச்சூழல் முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்ற நழுவல் போக்கு போன்ற விடயங்களில் ஒன்றாகவும் , முறையாகவும் செயற்படாமையின் காரணமாக அனர்த்த ஆபத்து வலுவடைந்ததின் விளைவாக அனர்தங்கள் ஏற்படுவதுடன் இழப்புக்களையும் சந்திக்க வேண்டியுள்ளது.

அனர்த்ததிற்கு முன்னர் செயற்படுத்த வேண்டிய அனர்த்த குறைப்பு, தணிப்பு, அனர்த்த தயார்படுத்தல் மற்றும் முன்னெச்சரிக்கை பொறிமுறைகளை வலுப்படுத்துதல் போன்ற விடயங்களில் கூடிய கவனம் செலுத்தப்படுதல் அவசியமாகும். ஆனால்
இவை தொடர்பில் திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் முழுமையான கவனம் செலுத்த தவறியதன் விளைவாக அதிக இழப்புக்களை சந்திக்க நேரிடுகின்றது.

 அனர்த்த அபாய குறைப்பு முகாமைத்துவம் தொடர்பான செயற்பாடுகளை எமது அம்பாறை மாவட்டதில் வினைத்திறனுடன் கொண்டு செல்வதற்காக சுமார் 100க்கு மேற்பட்ட பயிற்றுவிப்பாளர்கள் சகல பிரதேச செயலகங்கள், சுகாதாரத்துறையினர் மற்றும் ஏனைய துறைசார் திணைக்களங்களிலும் உள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு அதற்கான முழு முயற்சிகள் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அது மாத்திரமல்லாமல் அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது . இவ்வாறன நிலையிலும் அனர்த்த அபாய குறைப்பு முகாமைத்துவ செயற்பாடுகளை கொண்டு செல்வதற்கான ஆர்வமானது சகல மட்டத்திலும் குறைவாக உள்ளமை அவதானிக்க முடிகின்றது. நாளை (13) அனுஷ்டிக்கப்படும் அனர்த்த அபாய குறைப்பு தினமானது ஐ.நா.சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது எனவும் தெரிவித்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours