இ.சுதா
வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதில் ஆர்வம் காட்டும் அரசு, கடனை அடைப்பதற்கு வழி தெரியாமல் திக்கு முக்காடுகிறது.
கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்.
மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புதல், அத்தியாவசியப் பொருட்களை நியாய விலையில் வழங்குதல் என்ற தேர்தல் கோசத்துடன் வென்ற ஆட்சியாளர்களைக்கொண்ட அரசாங்கம் இப்போது என்ன செய்கிறது ? சொன்னதைச் செய்ததா, செய்வதைச் சொன்னதா ? வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதில் ஆர்வம் காட்டும் அரசு கடனை அடைப்பதற்கு வழி தெரியாமல் திக்கு முக்காடுகிறது என்று கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
எரிபொருட்களின் விலையேற்றம் தொடர்பாக ஊடகவியலாளரால் கேட்கப்பட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
எரிபொருட்களின் விலையேற்றம் கணிசமாக உயர்ந்துள்ளதனால் அத்தியாவசிய, ஆடம்பரப் பொருட்களின் விலைகள்
மேன்மேலும் உயரப்போகின்றது. அதாவது பொருட்களின் விநியோகச் செலவுகள் அதிகரிக்க அதிகரிக்க பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரிக்கவுள்ளது. போக்குவரத்துக் கட்டணமும் 20 வீதத்தால் அதிகரிக்கக் அத்துறையினால் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
இன்று, எரிபொருள் விலையுயர எல்லா விலைகளும் உயரும் என்கிறது இலங்கைப் பொருளாதாரம். மக்களின் உழைக்கின்ற வருமானம் குறைந்துள்ளது, ஆனால் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. அரசு கடன் சுமையில் தள்ளாடுகிறது. சர்வதேச ரீதியான மதிப்பீட்டின்படி கடன்களை மீளச்செலுத்தும் தர நிருணயத்தில் இலங்கை CCC தரத்தில் இருந்து CC என்ற நிலையில் தரமிறக்கப்பட்டுள்ளது. அதாவது கடன்களை மீளச் செலுத்தும் நம்பகத் தன்மையின் அளவு குறைந்துள்ளது. இப்படியான நிலையில் வெளிநாட்டுக் கடன்களை அடைக்கின்ற தேவை இருப்பதால் எரிபொருட்களின் விலையை ஏற்றியுள்ளதாக, அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.
அப்படிப் பார்த்தால் சுமார் 70 வீதமான மக்கள் வறுமைப்பிடியுள் சிக்கியுள்ளார்கள். வருவாய் குன்றிய நிலையில் தள்ளாடும் மக்கள் இப்போது அதிக விலை கொடுத்து எரிபொருட்களை மட்டுமல்லாமல் அன்றாட அத்தியாவசியப் பொருட்களையும் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது. குறைந்த வருமானம் கூடிய விலை என்று பார்த்தால் குறைவான வருமானத்தில் குறைவான பொருட்களையே கொள்வனவு செய்ய முடியும். இதனால் கணிசமான மக்கள் பட்டினியோடு அரைகுறை உணவுகளோடு அன்றாடம் வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
அன்று மைத்திரி, ரணில் ஆட்சியில் ஒரு லீற்றருக்கான எரிபொருள் விலையேற்றம் சாதாரணமாக ஐந்து ரூபாய் கூடும்போது ஈருருளி வண்டிகள், மாட்டு வண்டில்களில் பாராளுமன்றத்திற்கு வந்த இன்றைய ஆட்சியாளர்கள் இப்போது கணிசமாக எரிபொருட்களின் விலைகளை ஏற்றியுள்ளனர். இதனால் நிச்சயமாக மக்களின் வயிறுகள் எரியப்போகிறது. மந்த போசணை, பட்டினி, நோய்த்தொற்றுகள் என்பவற்றுக்கு மக்கள் இலக்காக இருக்கிறார்கள்.
மேலும் வருமானம் குன்றிய நிலையில் களவுகள், கொள்ளைகள், கலாசார சீரழிவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் வருடத்தில் பல பில்லியன் டொலர் கடன்களை இலங்கை அரசு செலுத்த வேண்டியுள்ளதனால் மக்களே அக்கடன்களைப் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. அதாவது எரிபொருள், பொருட்களின் விலையேற்றம் மூலமாக மக்கள் செலுத்தும் மறைமுக வரிகள் மூலமாகத்தான் அரசு பிழைக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளை நோக்கிக் கடன் வலைகளை விரிப்பதிலும் வீசுவதிலுந்தான் அரசு கவனம் எடுக்கிறது. அதற்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதில்லை என்றும் இறுமாப்புக்காட்ட விளைகிறது. யுத்தம் இல்லாத நாட்டில் 37300 கோடி ரூபாய்களை பாதுகாப்புச் செலவுக்காக ஏன் இந்த அரசு பாதீட்டில் ஒதுக்கியுள்ளது? மக்களின் வயிறுகள் எரிகின்ற போது அநாவசியமான நிதியொதுக்கீடுகள் எதற்கு என்று மக்கள் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசின் வாக்குறுதிகள் புஷ்வாணமாகிவிட்டது. அதிரடியான முறையில் விவசாயத்திற்கான இரசாயன வளமாக்கியை இந்த அரசாங்கம் கட்டுப்படுத்தியதால் அல்லது வழங்காததால் எதிர்காலத்தில் விவசாய விளைச்சலும் குன்றுவதற்கான வாய்ப்புள்ளது. இதனால் அரிசியின் விலையும் அபரிமிதமாக அதிகரிக்கப்போகிறது. இதனால் இந்த அரசாங்கக் காலத்தில் பசி, பஞ்சம் பட்டினிக்கான யாத்திரையும் ஆரம்பிக்கத்தான் போகிறது.
சொன்னதும் செய்வதும் சுத்தமான முரண்பாடுகளாகவே உள்ளன. மக்கள் ஏமாறுவதும் ஆட்சியாளர்கள் ஏமாற்றுவதும் இந்த நாட்டின் அரசியல் வரலாறாகியுள்ளது. இதனால்தான் 73 ஆண்டுகளாக இந்த நாடு பிரச்சினைக்குரிய நாடாகவும் அபிவிருத்தி அடையாத நாடாகவும் உள்ளது என்றார்.
Post A Comment:
0 comments so far,add yours