(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு


இன்றையதினம் கொழும்பில் அமைந்துள்ள இலங்கை நாட்டுக்கான  இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு விசேட விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி ஆணையாளர் வினோத் கே ஜேக்கப் , இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக ஆலோசகர் வைத்தியகலாநிதி. ராகேஷ் பாண்டே, அரசியல் செயலாளர் பாஸ்டியன் என் சாக்கோ ஆகியோரை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

குறித்த கலந்துரையாடலின் போது (பா. உ) சந்திரகாந்தன் தான் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசுடன் இணைந்து முன்னெடுத்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் மக்கள் நலன்சார் விடயங்கள் தொடர்பிலும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டதுடன் விசேடமாக கிழக்கு மாகாணத்தின் துரித அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும், தற்போது கிழக்கு மாகாணத்தில் யுத்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார திட்டங்களை ஒழுங்கு செய்து வழங்குவது தொடர்பிலும், ஆடைத் தொழிற்சாலைகளை அமைத்தல் மற்றும் அதற்கான வர்ணநூல் உற்பத்தித்  தொழிற்சாலைகளை அமைத்தல் தொடர்பிலும் அதனூடாக அதிகளவான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பிலும் முன்னாள் போராளிகளின் குடும்பங்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த வீடுகள் அற்றோருக்கான  விசேட வீட்டுத் திட்டங்களை ஒழுங்கு செய்து வழங்குதல் தொடர்பிலும், புதிய துறைமுகங்களை நிறுவி மீன்பிடி மற்றும் கடல்சார் தொழில் நடவடிக்கைகளை மேம்படுத்துதல் மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க கூடிய இந்திய முதலீட்டாளர்களை உள்வாங்குவது தொடர்பிலும், மாகாணத்தின் பல பாகங்களிலும் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவாக்குதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிலையங்களை விருத்தி செய்தல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துதல்  போன்ற பலவிடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடியிருந்தார்.

அத்துடன் இந்திய அரசினால் இலங்கை தமிழர்களின் நலன்கருதி முன்னெடுக்கப்படும் அனைத்துவிதமான நலன்சார் திட்டங்கள் தொடர்பிலும் கிழக்குத் தமிழர்களும் விசேடமாக உள்வாங்கப்பட வேண்டும் என்பதனையும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் வலியுறுத்தியிருந்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours