திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஏற்பட்ட அசம்பாவிதம் தொடர்பில் மாகாண கல்வித் திணைக்களம் பாரபட்சமாக செயற்பட்டிருப்பதாக இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனக்கோரி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் உள்ளிட்டோருக்கு மகஜர்களை அனுப்பி வைத்திருப்பதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.எல்.முகம்மட் முக்தார் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
குறித்த பாடசாலையில் ஏற்பட்ட அசம்பாவிதத்தில் வலயக் கல்வி பணிப்பாளரும் மாகாண கல்விப் பணிப்பாளரும் ஒரு தலைப்பட்சமாக செயற்பட்டுள்ளதனை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளவே
முடியாது.
ஒரு பாடசாலையில் அசம்பாவிதம் ஒன்று ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட இரு தரப்பினரையும் அப்பாடசாலையில்
இருந்து தற்காலிகமாக அகற்றுவதுதான் நீதியானதொரு நடவடிக்கையாக கொள்ள முடியும். ஆனால்
இங்கு அபாயா அணிந்து சென்ற ஆசிரியை விடயத்தில் பாரபட்சம் காட்டப்பட்டிருக்கிறது.
மாகாணக் கல்வி திணைக்களம் மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்கள் இவ்விடயத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்தான் குற்றவாளி என தீர்மானித்து செயற்படுவது போல் தெரிய வருகிறது.
ஒரு தேசிய பாடசாலையில் இருந்து ஒரு ஆசிரியரை தற்காலிகமாக மாகாணப் பாடசாலைக்கோ அல்லது கல்வி அலுவலகத்திற்கோ இணைக்கும் அதிகாரம் மாகாண கல்வி திணைக்களத்திற்கோ அல்லது வலயக் கல்வி அலுவலகங்களுக்கோ இல்லை. இதற்கான அனுமதியை மத்திய கல்வி அமைச்சிடமிருந்து பெற வேண்டும். குறித்த ஆசிரியை விடயத்தில் இவ்விதிமுறை மீறப்பட்டிருக்கிறது.
சண்முகாவில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக பாதிக்கப்பட்ட ஆசிரியையை அங்கிருந்து தற்காலிகமாக அகற்றி, கல்வி அலுவலகத்திற்கு இணைப்புச் செய்த கிழக்கு மாகாண கல்வி திணைக்களம், வெளியாரை அழைத்து அந்த ஆசிரியையை தாக்கிய அதிபரை ஏன் அவ்வாறு இணைப்பு செய்யவில்லை என கேள்வி எழுப்புகிறோம். ஆகையினால், இது விடயத்தில் தலையிட்டு நீதியை நிலைநாட்ட ஆவன செய்யுமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரைக் கோரியுள்ளோம்- என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours