ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக விதைக்கப்பட்டிருக்கின்ற இனவாதமும் மதவாதமும் ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்படும் ஊழல், மோசடிகளும் ஒழிக்கப்பட்டாலே சீரழிந்து போயுள்ள எமது நாடு மீண்டும் உருப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
சீரழிந்த நாட்டை கட்டியெழுப்புகின்ற தீர்வு எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் மன்றம் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சக்தியின் கல்முனைத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாட்டின் சமகால அரசியல் குறித்து பேசிய அனுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில்;
நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னர் மாறி மாறி ஆட்சிக்கு வந்தோர் நாட்டை சூறையாடுவதிலேயே குறியாக இருந்து வந்துள்ளனர். நாட்டின் சொத்துக்களையும் மக்களின் வரிப்பணத்தையும் திருடுவதில் அவர்கள் முனைப்புக் காட்டுகின்றனர். அதனால் ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் பணக்காரர்களாக மாறி விடுகின்றனர். மக்கள் ஏழைகளாக மாற்றப்படுகினறனர். இதனாலேயே நாட்டின் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டிருக்கிறது.
ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஊழல், மோசடிகளை இல்லாதொழித்து, அவர்களை தண்டிப்பதற்காக 2015ஆம் ஆண்டு ராஜபக்ஷ கும்பலை வீட்டுக்கு அனுப்பி விட்டு, மைத்திரி, ரணில் ஆட்சியை ஏற்படுத்தினோம். அவர்கள் ராஜபக்ஷக்களை தண்டிக்கவில்லை. ஏனென்றால் அவர்களது ஆட்சியிலும் ஊழல், மோசடிகளே அரங்கேறியது.
மைத்திரி, ரணில் ஆட்சியை வீழ்த்தி, மீண்டும் ராஜபக்ஷக்கள் ஆட்சியைப் பிடித்தனர். நல்லாட்சியில் ஊழல் செய்தோரை சிறையில் அடிப்போம் என்றார்கள். ஆனால் எவரும் தண்டிக்கப்படவில்லை. ஏன் என்றால் இரு தரப்பினரும் ஊழல், மோசடிக்காரர்களே. அதனால் எவரும் எவரையும் தண்டிக்க மாட்டார்கள். திருடாத ஒருவனாலேயே திருடுகின்றவனைத் தனடிக்க முடியும். அவ்வாறாயின் ஊழல், மோசடி இல்லாத தூய்மையான அரசியல் செய்கின்ற எமது தேசிய மக்கள் சக்தியினால் மாத்திரமே திருடர்களை தனடித்து, ஊழல், மோசடி இல்லாத தூய ஆட்சியை கொண்டு செல்ல முடியும்.
அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும் அதனைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் ராஜபக்ஷவினர் அப்பாவி மக்கள் மத்தியில் இனவாதத்தையும் மதவாதத்தையும் விதைத்து, தூண்டி விட்டு, தமது ஆசையை தீர்த்துக் கொள்கின்றனர். அளுத்கம, திகன பகுதிகளில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டது எதற்காக? பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டது எதற்காக? அபாயா பிரச்சினை எதற்காக?
வெவ்வேறு மத, கலாசாரங்களை பின்பற்றுகின்ற போதிலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகின்றோம். ஆட்சியாளர்களே முரண்பாடுகளையும் பிளவுகளை ஏற்படுத்தி மக்களை இன, மத ரீதியாக பிரிக்க முற்படுகின்றனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் தெற்கில் இனவாதத்தைத் தூண்டியே ராஜபக்சவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். தெற்கில் சிங்கள இனவாதம் தலைவிரித்தாடியபோது கிழக்கில் அதற்கு எதிராக முஸ்லிம் கட்சிகள் உங்களிடம் வாக்குகள் கேட்டனர். நீங்கள் சிங்கள இனவாதத்திற்கு எதிராக வாக்களித்தீர்கள், ஆனால் அதன் மூலம் தெரிவான முஸ்லிம் எம்.பி.க்கள் என்ன செய்தார்கள்?
அவர்கள் சிங்கள இனவாதக் கும்பலுடன் கைகோர்த்துக் கொண்டனர். அவர்கள் இருபதாவது திருத்தத்தை ஆதரித்து, சிங்கள இனவாதத்தை மேலும் பலப்படுத்தியுள்ளனர். அதன் மூலம் அவர்கள் ஜனாஸாக்களை எரிப்பதற்கு துணை போனார்கள். இன்னும் அரங்கேறுகின்ற அனைத்து இனவாத செயற்பாடுகளுக்கும் அவர்கள் முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று இப்போது நீங்கள் கைசேதப்படுகின்றீர்கள்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் யாரால் எதற்காக மேற்கொள்ளப்பட்டது?
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று மல்கம் ரஞ்சித் ஆண்டகை சந்தேகம் வெளியிட்டிருக்கிறார். நாங்களும் அவ்வாறே சந்தேகிக்கிறோம். இத்தாக்குதலுக்கு பின்னர் என்ன நடந்தது? முஸ்லிம்கள் மீது இனவாத தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.
புலிகள் முற்றாக அழித்தொழிக்கப்பட்ட பின்னர் கூட புலி வருது புலி வருது என்று கூறிய ராஜபக்ஷவினர் கடந்த தேர்தலில் என்ன முஸ்லிம் புலி என்ற பிரசாரத்தையே முன்னெடுத்திருந்தனர். அதனையே தமது தேர்தலுக்கான மூலதனமாக பயன்படுத்தியிருந்தனர்.
கருத்தடை கொத்து, கருத்தடை வைத்தியர், கருத்தடை ஆடை என்றெல்லாம் இனவாத பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. இப்போதும் முஸ்லிம்களின் மத, கலாசார விடயங்களில் கை வைக்கப்படுகின்றன. முஸ்லிமகளுக்கு எதிராக அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் தூண்டி விடப்படுகின்றன.
இனவாதத்தையும் மதவாதத்தையும் திருட்டையும் ஒழித்தால் மாத்திரமே சீரழிந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். அதனை யாரால் செய்ய முடியும்? இனவாதம், மதவாதம், திருட்டு இல்லாத தேசிய மக்கள் சக்தியினால் மாத்திரமே அதனைச் செய்ய முடியும். அதனால் போலி அரசியலில் இருந்து விடுபட்டு எம்மோடு கைகோர்க்க கிழக்கு மக்கள் முன்வர வேண்டும்- என்றார்.
Post A Comment:
0 comments so far,add yours