( க.விஜயரெத்தினம்)
கல்வியைத்தொடரும் இன்றையை மாணவர் சமூகம் தகவல் தொழிநுட்ப வளர்ச்சிப்போக்கை சரியாக பயன்படுத்தா விட்டால் யுத்தகாலத்தில் தமிழ்சமூகம் இழந்த கல்வியை மீண்டும் மீளப்பெறுவதற்கு வாய்ப்பு நழுவிச் செல்லுமென
நாவிதன்வெளி -அன்னமலை மகா வித்தியாலயத்தின் அதிபர் சீனித்தம்பி பாலசிங்கன் தெரிவித்தார்.
புலம்பெயர் நாடுகளின் உறவுகள்,நண்பர்களின் நிதிப்பங்களிப்புடன் வடகிழக்கில் இயங்கும் "தமிழ் ஓவ் லங்கா" நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு குறித்த நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் நாவிதன்வெளி குடியிருப்புமுனை சண்முகா வித்தியாலயத்தியாலயத்தை சேர்ந்த 47 மாணவர்களுக்கான 2000 பெறுமதியான கொப்பிகள்,கழுத்துப்பட்டிகள்,கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு குடியிருப்புமுனை சண்முகா வித்தியாலயத்தின் அதிபர் இலட்சுமணன் முரளிதரன் தலைமையில் இன்று சனிக்கிழமை(12)காலை 11.30 மணியளவில் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி -அன்னமலை வித்தியாலயத்தின் அதிபர் சீனித்தம்பி பாலசிங்கன் பிரதம அதிதியாகவும்,தமிழ் ஓவ் லங்கா நிறுவனத்தின் இலங்கைக்கான இணைப்பாளரும்,தலைவருமான சந்திரசேகரம் இளந்தீபன்(தீபன்)விஷேட அதியாகவும்,களுவாஞ்சிகுடி நந்தவனம் முதியோர் இல்லத்தின் தலைவர் வேலுப்பிள்ளை தவராசா,ஊடகவியலாளர்களான செல்லையா பேரின்பராசா,க.விஜயரெத்தினம் கௌரவ அதிதிகளாகவும்,மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் கலந்துகொண்டார்கள்.
தமிழ் ஓவ் லங்கா நிறுவனமானது வடகிழக்கு மற்றும் மலையகம் போன்ற பிரதேசங்களில் யுத்தம் மற்றும் வறுமையினால் பாதிக்கப்பட்டு நலிவுற்று இருக்கும் மக்களுக்கும்,மாணவர்களுக்கும் வாழ்வாதார உதவிகள்,கற்றல் உபகரணங்கள்,மற்றும் வீடற்ற 7பேருக்கு புதிய வீடுகள் அமைக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளதுடன் இதுவரையும் பல காத்திரமான பணிகளை முன்னெடுத்து கடந்த மூன்று ஆண்டு காலமாக செயற்பட்டு வருகின்றது.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி -அன்னமலை மகா வித்தியாலயத்தின் அதிபர் சீனித்தம்பி பாலசிங்கன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில்...
இன்று கற்றல் உபகரணங்களை பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் தகுதியானவர்கள்.இவ்வாறானவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குவதால் மாணவர்கள் இழந்த கல்வி மீளப்பெறுவதற்கு வாய்ப்புக்கள் கிடைத்திருக்கின்றது.இவ்வாறான உபகரணங்களை வழங்கும் தமிழ் ஓவ் லங்கா நிறுவனத்தினர் பாக்கியசாலிகள்,பாராட்டுக்குரியவர்கள்.மாணவர்கள் இன்றைய தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக மாணவர்களின் இரவுநேர கற்றல் செயற்பாடுகள் மாணவர்களை பிழையான பாதைக்கு கொண்டு சென்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது.புதிய தகவல் தொழிநுட்ப வளர்ச்சியானது சில மாணவர்களுக்கு நன்மையையும்,பல மாணவர்களுக்கு தீமையையும் கொடுக்கின்றது.எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள்மீது கவனம் செலுத்தி சமூகம் எதிர்பார்க்கும் நற்பிரஜைகளை ஒவ்வொரு பெற்றோர்களும் உருவாக்குவதற்கு அத்திரவாரம் இடப்படவேண்டும்.எம்முடைய தமிழ்சமூகம் கல்வியை தொடர்வதற்கு வறுமையை காரணம் சொல்லக்கூடாது.வறுமையை,கஸ்டத்தை தமிழ்மாணவ சமூகம் சவாலாக எடுத்து கல்வியில் சாதணைகளை நிலைநாட்ட வேண்டும்.கல்வியைத்தொடரும் இன்றையை மாணவர் சமூகம் தகவல் தொழிநுட்ப வளர்ச்சிப்போக்கை சரியாக பயன்படுத்தா விட்டால் யுத்தகாலத்தில் தமிழ்சமூகம் இழந்த கல்வியை மீண்டும் மீளப்பெறுவதற்கு வாய்ப்பு நழுவிச் செல்லுமென குறிப்பிட்டார்.
Post A Comment:
0 comments so far,add yours