இன்று தோற்றிருப்பது பொருளாதாரமோ ஏனைய விடயங்களோ அல்ல. இந்த அரசாங்கத்தின் இனவாதமே தோற்றிருக்கின்றது என்பதே இன்று நாட்டின் நிலைமை சொல்லும் உண்மையான செய்தி என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினருமான கி.சேயோன் தெரிவித்தார்.


இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 124வது ஜனன தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தந்தை செல்வா என்ற ஒருவர் உருவாகாமல் இருந்திருந்தால் இந்த நாட்டில் தமிழர்களின் நிலைமை மிக மோசமாக இருந்திருக்கும் என்பது இன்று உண்மையான தீர்க்கதரிசனமாக இருக்கின்றது. தமிழரசுக் கட்சியை உருவாக்கி அவரின் தீர்க்கதரிசனத்தின் மூலம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வெளியிட்டிருந்தார். அதன் பின்னர் தான் தமிழர்சேனை பட்டிதொட்டியெங்கும் எமது உரிமைகளுக்காகப் போராட ஆரம்பித்தன.

இவ்வாறு போராட்ட வரலாறு ஆரம்பிக்கப்பட்டு எமது தமிழ் மக்களுக்காக இருந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டிருக்கின்ற இந்த நேரத்தில் தேசியத் தலைவரினால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம் மிகவும் கனதியாக இருக்கின்றது. தற்போது நாட்டில் இருக்கின்ற சூழ்நிலையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளும் மக்களுக்கு மிகவும் தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.

தற்போது இந்த நாட்டின் அரசாங்கம் பொருளாதாரக் கொள்கையில் தோல்வியடைந்து நாட்டை நிருவகிக்க முடியாமல் இருக்கின்றது. இன்று தோற்றிருப்பது பொருளாதாரமோ ஏனைய விடயங்களோ அல்ல. இந்த அரசாங்கத்தின இனவாதமே தோற்றிருக்கின்றது என்பதே இன்று நாட்டின் நிலைமை சொல்லும் உண்மையான செய்தி. அவ்வாறு அரசில் இருந்து இனவாதம் பேசிய சிலர் அரசிலிருந்து வெளியில் வந்து தொடர்ந்தும் இனவாதத்தைப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இன்று இவ்வாறான இனவாதிகளை எந்த சிங்கள தலைவர்களும் ஏற்றுக் கொள்கின்ற நிலையில் இல்லை.

அன்று ஆயுதத்தால் சாதிக்க முடியாத விடயத்தை தமிழத் தேசியக் கூட்டமைப்பு இன்று டொலரினால் சாதிக்கப் பார்க்கின்றது என்ற கருத்துகளும் அந்த இனவாதிகளால் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான செய்திகளை இங்கிருக்கின்ற எமது தமிழ் தரப்புகள் விளங்கிக் கொள்ள வேண்டும். இத்தகைய அரசியல் சூழலை எவ்வாறு கையாள வேண்டும் என்ற ஞானம் இருக்க வேண்டும். இவ்வாறு எமக்குச் சாதகமாகப் பயன்படுத்த இருக்கின்ற சூழ்நிலைகளை எமது தமிழ் தரப்புகள் உதறித்தள்ளிவிட்டு செல்லக் கூடாது. அனைவரும் கைகோhத்து எமது உரிமைப் போராட்டத்திற்கு ஒன்றாக இருக்கவேண்டும்.

நல்லாட்சிக் காலத்தில் அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை வருகின்ற போது இதில் சமஸ்டி விடயம் இருக்கின்றமை தொடர்பில் உதயகம்மன்பில போன்ற இனவாதிகள் சுட்டிக் காட்டினர்;. ஆனால் அன்று இந்த நடைமுறைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போது சில தமிழ்த் தரப்புகளே எதிர்த்திருந்தார்கள். அவ்வாறான நிலைமைகள் மாற வேண்டும்.

இன்றும் இந்த அரசாங்;கத்தின் மனோநிலை மாறவில்லை என்பதற்கு உதாரணமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் யாழில் பொலிசாரினால் தாக்கப்பட்ட விடயம் இருக்கின்றது. இந்த விடயத்தை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணி மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. இது தொடர்பில் நீPதிக்கான போராட்டம் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அதற்கு எமது வாலிபர் முன்னணி பூரண ஆதரவையும் வழங்கும்

தற்போதைய நிலைமையில் தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கு இராஜதந்திர நடைமுறை வேண்டும். அதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து கொண்டிருக்கின்றது. அனைத்துத் தமிழ் தரப்புகளும் தங்களுடைய தனிப்பட்ட எண்ணங்கள் சிந்தனைகளையெல்லாம் விடுத்து மக்களுக்காக ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours