(க.விஜயரெத்தினம்)

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாற்றில் வெசாக் தினத்தில் விற்பனை செய்வதற்காக மறைந்து வைக்கப்பட்டிருந்த சுமார் 06இலட்சம் ரூபா பெறுமதியான மதுபான போத்தல்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சனிக்கிழமை(14)மாலை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பெரியகல்லாறு வைத்தியசாலைக்கு அருகில் செல்லும் வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்தே இந்த மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.

நாளை ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் வெசாக் பொசோனையொட்டி மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரித்திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மதுபான போத்தல்கள் இவ்வாறு விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 750 கால் போத்தல்கள் மதுபான போத்தல்களும்,480பியர் டின்கள்,94பியர் போத்தல்கள் உட்பட சுமார் 06இலட்சம் ரூபா பெறுமதியான  மதுபானபோத்தல்கள் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரி.அபேயவிக்ரம தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாகவும்,களுவாஞ்சிகுடி பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ஜெயரட்னவின் ஆலோசனைக்கு அமைவாகவும்,களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரி.அபேயவிக்ரம தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த முற்றுகை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சட்ட விரோத மதுபான விற்பனை இயங்குவது தொடர்பிலான புலனாய்வுத்தவல்களுக்கு அமைவாக இந்த முற்றுகை முன்னெடுக்கப்பட்டதாகவும், கைதுசெய்யப்பட்டவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜராக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours