(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

வன்முறையற்ற அகிம்சை ரீதியான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் நண்பர்களாக ஒன்றினைந்து மட்டக்களப்பில் பிரார்த்தனை நடைபவணியொன்று இன்று (13) திகதி இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுக்கப்பட்டது.

மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து ஆரம்பித்த குறித்த பிரார்த்தனை நடைபவணியானது அமைதியான முறையில் மட்டக்களப்பு நகர மத்தியில் உள்ள காந்தி பூங்காவை சென்றடைந்தது.

நடைபவணியானது காந்தி பூங்காவை சென்றடைந்ததும், குறித்த நடை பவணியில் கலந்துகொண்டவர்கள் தமது ஆடைகளில் தொங்கவிடப்பட்டு காட்சிப்படுத்தியிருந்த பல்வேறு அம்ச கோரிக்கைகள் அடங்கிய வாசகங்கள் பொறிக்கப்பட்ட அட்டைகளை காந்தி அடிகளின் சிலை அமைந்துள்ள வளாகத்தில் காட்சிப்படுத்தியதுடன், சுடர் ஏற்றி, சில நிமிடங்கள் அமைதியான முறையில் பிரார்த்தனையிலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த அமைதிப் பிரார்த்தனை நடைபவணியின் போது "அமைதிக்காக, நீதிக்காக நாங்கள் நடக்கின்றோம்",
"நம் அனைவருக்கும் பொருளாதார பாதுகாப்பு அத்தியாவசியமாகும்",
"நம்பகமான, திடமான அரசாங்கம் எமது உரிமை", "பசியின்றி, பிணியின்றி, கல்வி, சுகாதாரம் என்பன  அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட நிம்மதியான வாழ்வே எம் அனைவருக்கும் தேவை",  "நீதிக்காக வீதியில் இறங்குவது இது
முதல்முறை அல்ல", "யுத்தம், அனர்த்தம், வன்முறை என்று வீட்டில் நாட்டில் நடந்த, இன்றும்
நடந்து வரும், பல பிரச்சினைகளின்போது நீதிக்காக வீதியில் இறங்கியுள்ளோம்", "வாழ்வின் அடிப்படைத் தேவைகள் உள்ளமை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில், எமது
ஊரை, நாட்டை மீட்டெடுக்க அமைதியாக போராட வெளிவந்துள்ளோம்",
"இப்போராட்டம் நம் அனைவருக்குமானது",
"வாருங்கள் சேருங்கள்,
ஊருக்காய், நாட்டுக்காய் வாருங்கள்", "நமது வருங்கால சந்ததியருக்காய் ஒன்று கூடுவோம்",
"அமைதி காப்போம், போராடுவோம்" மற்றும் "வாழ்க மக்கள் போராட்டம்"
போன்ற பல்வேறுபட்ட வாசகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ள குறித்த பிரார்த்தனை நடைபவணியில் இரண்டாம் நாள் நடைபவணி இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த பிரார்த்தனை நடைபவணியில் ஒருமித்த குரலாய் நண்பர்களாய் அனைவரும் ஒன்றினைந்து பங்கேற்கலாம் என இதன்போது தெரிவித்திருந்தனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours