(சுமன்)



தமிழர்கள் விட்ட கண்ணீர் இன்று இந்த அரசை ஆட்டிப் படைக்கின்றது. எங்களது உறவுகளை அழித்தவர்கள் இன்று தங்களது சொந்த நாட்டிற்குள்ளே பாதுகாப்புத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றார்கள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க அம்பாறை மாவட்டத் தலைவி த.செல்வராணி தெரிவித்துள்ளார்.

'உப்பில்லாக் கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்' என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் அவல நிலையை நினைவு கூரும் முகமாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வின் இரண்டாம் நாள் இன்றைய தினம் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் என்பது இன்று பதின்மூன்று வருடங்களின் பின்னர் இலங்கையில் நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எங்களது சொந்தங்களை, உறவுகளை, உடமைகளை அழித்தவர்கள் இன்று தங்களது சொந்த நாட்டிற்குள்ளே பாதுகாப்புத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். இருப்பதற்கு தக்க இடமில்லாமல், ஒழிப்பதற்குக் கூட இடமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழர்கள் விட்ட கண்ணீர் இன்று இந்த அரசை ஆட்டிப் படைக்கின்றது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சங்கத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டு 'முள்ளிவாய்க்கால் உப்பிலாக் கஞ்சி' தயார் செய்து பிரதேச பொதுமக்களுக்கு வழங்கினர். இதனைப் பொதுமக்;களும் பெரும் ஆவலுடனும், உணர்வு பூர்மாகவும் அருந்திக் கொண்டனர்.

2009ம் ஆண்டு இறுதி யுத்த காலப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவாகவும், அவ்வுறவுகள் பட்ட அவலங்களை பறைசாற்றும் முகமாகவும் முள்ளி வாய்க்கால் கஞ்சிவாரம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. குறித்த நிகழ்வானது மே 12 தொடக்கம் மே 18 வரையான காலப்பகுதிகளில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours