(வி.ரி.சகாதேவராஜா)
நாவலர் ஆண்டிலே – ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் திருவாவதாரம் செய்த இருநூறாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டுடனும் நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை மற்றும் யாழ். மாநகர சபையின் சமய விவகாரக் குழு ஆகியவற்றின் இணை ஏற்பாட்டுடனும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு இனிதே நிகழ்ந்தேறியது.
கடந்த டிசம்பர் மாதம் 14, 15, 16 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் நாவலர் பெருமான் அவதரித்த புனித பதியிலே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு நிகழ்ந்தேறியது. நாவலர் பெருமானின் குருபூஜை நன்னாளிலே ஆரம்பமாகி ஜனன தின நாளிலே நிறைவு கண்ட இம்மாநாட்டு நிகழ்வுகள் நல்லூர்ப் பதியிலே நாவலர் மணிமண்டபம், நாவலர் கலாசார மண்டபம், ஸ்ரீ துர்க்கா மணிமண்டபம், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபம் ஆகிய இடங்களிலே ஆன்மிக அரங்கு, பொது அரங்கு, ஆய்வரங்கு எனப் பல அரங்குகளாக இனிதே நிகழ்ந்தேறின.
இந்த மாநாட்டின் நிறைவு நாள் வைபவத்திலே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் எண்ணங்களுக்குச் செயல் வடிவம் கொடுத்து, சமூகத்தில் அர்ப்பணிப்பு மிக்க செயலாற்றிவரும் பாங்கினைப் பாராட்டி, ஈழத்தவர்கள் மற்றும் பாரத தேசத்தவர்கள் நாவலர் புகழ் விருது மற்றும் நாவலர் புகழ் விசேட கௌரவம் வழங்கிப் பாராட்டப்பட்டனர்.
அந்த வகையிலே தமிழ் இலக்கியப் பணியில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து ஆளுமை மிக்கவராய் வலம் வரும் கம்பன் கழக அமைப்பாளர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் இலக்கியப் பணிக்கான நாவலர் புகழ் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
ஆன்மிகப் பலம் வழிநடத்த, சிறந்த சமூக சேவையாளனாய் செயல் வீரனாய்த் திகழும் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் ஆற்றிவரும் அனைத்துத் துறை சார்ந்த பணிகளையும் சமூகப் பணியாய்ப் பாராட்டி சமூகப் பணிக்கான நாவலர் புகழ் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
புலம்பெயர் தேசத்தில் மட்டுமன்றி ஈழ தேசத்திலும் அர்ப்பணிப்பு மிக்கதும் ஆத்மார்த்தமானதுமான சமயப் பணி ஆற்றிவரும் கனடா சைவ சித்தாந்த பீட இயக்குநர், வைத்திய கலாநிதி இ.லம்போதரன் அவர்கள் சமயப் பணிக்கான நாவலர் புகழ் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
அற்புதம் நிறைந்த ஓவியப் பணியால் திறம்படக் கலைப்பணி ஆற்றிவரும் உலகப்புகழ் பெற்ற ஓவியர் திருமிகு மு.பத்மவாசன் அவர்கள் கலைப் பணிக்கான நாவலர் புகழ் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
இளைய தலைமுறையின் அர்ப்பணிப்பான சேவை இந்தச் சமூகத்திற்கு எப்போதும் தேவை என்பதில் ஆர்வமும் செயலூக்கமும் காட்டி அதற்கான செயற்பாடுகளைத் தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாக முன்னெடுத்துவரும் அமெரிக்கா,ஹவாய் சைவ ஆதீனத்தின் வணக்கத்திற்குரிய சிவாயசுப்பிரமுனிய சுவாமிகளின் சீடர் வணக்கத்திற்குரிய ஆன்மிகச்சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் அவர்கள் நாவலர் புகழ் – விசேட கௌரவம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் அவர்களைப் பாரத தேசத்தோடு இணைத்த செயலாக – இன்றும் நின்று நிலைக்கும் செயலாக இந்தியாவின் சிதம்பரத்திலே நிறுவிய சைவப் பிரகாச வித்தியாசாலை திகழ்கிறது. இந்தப் பாடசாலையின் பாரம்பரியம் மாறாது உலகப் போக்கிற்கு ஏற்ற வகையிலும் கல்வித் திட்டம் வகுத்து - என்றும் நின்று நிலைக்கும் பணியாற்றும் திறம் கருதி – வைத்திய கலாநிதி சு.அருள்மொழிச்செல்வன் அவர்கள் நாவலர் புகழ் – விசேட கௌரவம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் ஆரம்பித்த சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கற்று அங்கு பெற்றுக்கொண்ட அநுபவங்களை நீள நினைந்து தற்போது தன் நிர்வாகத்திற்கு உட்பட்ட – இந்தியாவின் தலை சிறந்த பள்ளிகளில் ஒன்றான ஸ்ரீ நடேசன் வித்தியாசாலை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாவலர் பெருமானை நினைவுகூரும் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துவரும் டாக்டர். ந.இராமசுப்பிரமணியன் அவர்கள் நாவலர் புகழ் – விசேட கௌரவம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
இந்த மாநாட்டு நிகழ்விலே இவர்களுக்கான கௌரவங்களை யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதன், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர்களான கலாகீர்த்தி உடுவை.எஸ்.தில்லைநடராஜா, திருமதி சாந்தி நாவுக்கரசன், திரு.அ.உமாமகேஸ்வரன் மற்றும் தற்போதைய பணிப்பாளர் திரு.ய.அநிருத்தனன் உள்ளிட்ட பிரமுகர்கள் வழங்கிக் கௌரவித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours