(சுமன்)
தற்போதைய நாட்டின் ஜனாதிபதியின் செயற்பாடுகள் பூரணமாக நம்ப முடியாமல் இருந்தாலும், தமிழ் மக்களுக்கான ஏதோவொரு விடயத்தை அவர் முன்னெடுப்பதற்கு முயற்சிக்கின்றமை புலப்படுகின்றது. எனவே பிறந்துள்ள இந்தப் புத்தாண்டாவது ஈழத்தமிழரின் நியாயமான அபிலாசைகள் நிறைவுறும் ஆண்டாக அமைய வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்துள்ளார்.
வாகரைப் பிரதேசத்தில் இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களின் சந்திப்பு மற்றும் இணைப்பாளர்கள், இளைஞர் அணி உருவாக்கம் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வாகரைப் பிரதேச இணைப்பாளர்களான யு.சதீஸ் மற்றும் க.லதாகரன் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் ஜனநாயகப் போரராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ், மட்டு அம்பாறை நிருவாகப் பொறுப்பாளர் தீபன், மட்டக்களப்பு இணைப்பாளர் சுதாகர், முன்னாள் போராளிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது கட்சியின் இளைஞர் அணிக்கான வாகரைப் பிரதேச பொறுப்பாளராக சி.துனேஸ்காந் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலின் போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈழத் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யவென கையில் ஆயுதமேந்தி உயிரைக் கொடுத்து போராடிய போராளிகள் இன்று ஆயுதம் மொளனிக்கப்படடதன் பின்னராக ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து எமது போராட்ட வடிவத்தை மாற்றி அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்கான நம்பகமான நடைமுறைகளை முன்னெடுக்கப் புறப்பட்டுள்ளோம்.
இந்த நாட்டிலே தமிழ் மக்கள் தங்களின் நியாயமான தீர்வினையே முன்வைத்தனர். ஆனால் ஆண்டு வந்த அரசாங்கங்கள் தமிழர்களின் கோரிக்கைளில் உள்ள நியாயத்தை மறைத்து சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களை எதிரிகளாகக் காட்டி எமக்கான உரிமையை வழங்க மறுத்ததன் காரணமாகவே போராட்ட வடிவங்கள் உக்கிரத்தன்மை அடைந்தன. இன்று அது மௌனிக்கப்பட்டிருந்தாலும் தமிழ் மக்கள் மனதில் உள்ள போராட்ட குணமும், உரிமைக் கோரிக்கையும் இன்னும் குறையவில்லை.
எத்தனையோ அரசாங்கங்கள் எம்மை அடக்க எத்தனையோ வழிமுறகைளைக் கையாண்டு வந்துள்ளன. எமது மக்களின் விடிவுகக்கான வழி இந்தியாவின் கைகளில் தற்போது தங்கியிருக்கின்றது. இந்தியா தற்போது போராளிகளாகிய எங்;களை அங்கீகரிக்கும் நடைமுறைகளைக் கையாண்டு வருகின்றது. அந்த ஒரு அங்கீகாரம் எமக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்தியாவின் துணையோடு தமிழ் மக்களுக்கான அரசியல் நகர்வினை நாங்கள் முன்னெடுக்கத் தயாராக இருக்கின்றோம்.
போராட்ட காலத்தில் தமிழ் மக்களின் ஆதரவு போராளிகளுக்கு எவ்வாறு இருந்ததோ அதேவிதத்தில் தற்போதைய அரசியல் போராட்டத்திலும் எமக்கு மக்களின் ஆதரவுத் தளம் அமைய வேண்டும்.
தற்போதைய நாட்டின் ஜனாதிபதியின் செயற்பாடுகள் பூரணமாக நம்ப முடியாமல் இருந்தாலும், தமிழ் மக்களுக்கான ஏதோவொரு விடயத்தை அவர் முன்னெடுப்பதற்கு முயற்சிக்கின்றமை புலப்படுகின்றது.
அந்த வகையில் அவரின் செயற்பாடுகள் மூலம் பிறந்துள்ள இந்தப் புத்தாண்டிலாவது தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு அரசியற் தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அதற்கான எமது முயற்சிகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று தெரிவித்தார்.

.jpeg)
.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours