நீதி
அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டு, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால்
ஒழுங்கமைக்கப்பட்ட மாபெரும் நடமாடும் சேவை நீதி, சிறைச்சாலை அலுவல்கள்
மற்றும் அரசியலமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் இன்று (27) காலை
9.00 மணிக்கு மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆரம்பித்து
வைக்கப்பட்டது.
சகல
அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் பங்கேற்று மக்களுக்கு சேவையை
பெற்றுக்கொடுக்கும் இம் மாபெரும் நடமாடும் சேவை தொடர்பான அறிமுகத்தை நீதி
அமைச்சின் ஒருங்கிணைப்பு பிரிவின் மேலதிக செயலாளர் ஆர். பி. எஸ்.
சமன்குமார் வழங்கினார்.
இவ் ஆரம்ப நிகழ்வில்
வர்த்தக
இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன், மாவட்ட அரசாங்க அதிபர்
திருமதி.கலாமதி பத்மராஜா உட்பட சகல அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின்
உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக பதவி நிலை அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.
மாவட்ட
மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் மற்றும் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு
புலம்பெயர்ந்து, மீண்டும் நாடு திரும்பிய மாவட்டத்தை சேர்ந்த மக்களின்
பிரச்சினைகள் போன்றவற்றிற்கு ஒரே நாளில், ஒரே இடத்தில் தீர்வை பெற்றுக்
கொடுப்பதற்கான மாபெரும் நடமாடும் சேவையாகவே இடம்பெற்றது.
குறித்த
நடமாடும் சேவையில் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு
மறுசீரமைப்பு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, ஆட்களை பதிவு செய்யும்
திணைக்களம், குடிவரசு, குடியகல்வு திணைக்களம், தலைமைப் பதிவாளர்
திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம்,
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும்
ஒருமைப்பாட்டிற்கான அலுவலகம்,
மத்தியஸ்தசபை ஆணைக்குழு மற்றும் சட்ட உதவி ஆணைக்குழு போன்றவற்றின் சேவை கூடங்கள் தமது சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்நடமாடும்
சேவையில் குடியுரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு, பிறப்பு, விவாகம்,
இறப்புச் சான்றிதழ்கள் பதிவு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவ் ஆவணங்களை
பெற்றுக் கொள்வது தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு,
தேசிய
அடையாள அட்டைகளை பெறுதல், திருத்தம் மற்றும் காணாமல் போன அடையாள
அட்டைகளுக்கான இரண்டாவது பிரதி ஒன்றினை வழங்குவது தொடர்பான சேவைகள், காணி
தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கான
தீர்வு,
இழப்பீடுகளுக்கான நட்ட ஈட்டினை பெற்றுக்
கொள்வது தொடர்பாக விண்ணப்பித்தவர்களின் கோவைகளில் காணப்படும் குறைபாடுகளை
பூர்த்தி செய்தல், காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை நடாத்துதல் மற்றும்
அவ் விசாரணைகளுக்கு தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்தல், மத்தியஸ்தம்
தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டத்தினை நடாத்துதல்,
காணி தொடர்பாக விசேட மத்தியஸ்த சபை தொடர்பான விழிப்புணர்வு , சட்ட ஆலோசனை போன்ற சேவைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Post A Comment:
0 comments so far,add yours