வி.ரி.சகாதேவராஜா


 தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினர் வரலாற்றில் முதல் தடவையாக "நிலையான சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் கட்டி எழுப்பும் நோக்கில் கதிகாமத்துக்கான இன நல்லிணக்க பாதயாத்திரையை நடத்தவிருக்கிறனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் பசிந்து குணரத்ன,  நிர்வாக பணிப்பாளர் சமல் மனுல பெரேரா ஆகியோரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு  இளைஞர் சேவை அதிகாரி தங்கராசா விந்தியனின்  சிந்தனையில் இந்த பாதயாத்திரை  செய்யப்பட்டிருக்கின்றது.

 நாடெங்கிலும் இருந்து 170 இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து எதிர்வரும் 13 ஆம் தேதி  பாதயாத்திரை மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமாகின்றது.

 அனைத்து இளைஞர் யுவதிகளையும் இன்று 12-ம் தேதி மாலைக்கிடையில் மட்டக்களப்பு மாமாங்கம் பிள்ளையார் ஆலயத்திற்கு வருகை தருமாறு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது..

 இந்த முதலாவது நல்லிணக்க பாதயாத்திரை ஆனது 13ஆம் தேதி காலை சம்பிரதாய பூர்வமாக மாமாங்கத்தில் இருந்து தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உயர் அதிகாரிகள் சகிதம் ஆரம்பித்து வைக்கப்பட இருக்கின்றது.

ஆரம்ப விழாவிலே ( 13 ஆம் தேதி காலை) மாமாங்க பிள்ளையார் ஆலயத்தில் தேசிய இளைஞர் சேவை மன்ற தலைவர் பசிந்து குணரட்ன, நிர்வாக பணிப்பாளர் சமல்,  கிழக்கு மாகாண பணிப்பாளர் சரத் சந்திரபால, மாவட்ட உதவிப்பணிப்பாளர் திருமதி ஜேசுதாசன் கலாராணி, மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் திருமதி நிலந்தி அருள்மொழி, அம்பாறை மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி கங்கா உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைப்பார்கள்.

இவர்களுக்கான காவி வேட்டி, காவி சாரி ,ருத்ராட்சை மாலை என்பவற்றை மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவை தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் வழங்க உள்ளார்.

 இவர்களுக்கான பாதயாத்திரையின் போதான சகல உணவு வகைகளையும் இலவசமாக வழங்க சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி ஏற்பாடு செய்திருக்கின்றார்.

நாளைய தினம்(13) செவ்வாய்க்கிழமை இரண்டு பஸ்களிலே பயணிக்கும் இளைஞர் யுவதிகள் அன்று  திருக்கோவில் சீரடி சாயிபாபா ஆலயத்தை தரிசித்து மாலை உகந்தை மலை முருகன் ஆலயத்தை அடைவர்.

 மறுநாள் 14ஆம் தேதி புதன்கிழமை சித்தர்கள் குரல் அமைப்பின் வேல் யாத்திரை அணியோடு இணைந்து அவர்கள் காட்டினூடாக பயணிக்க இருக்கின்றார்கள். காட்டிலே அவர்கள் செல்லுகின்ற பாதைகளில் எல்லாம் பொலித்தின் பாவனை தடை துப்புரவு வன ஜீவராசிகளை பாதுகாக்கின்ற பொறுப்பு இன நல்லுறவு போன்ற பல விடயங்களிலே கவனம் செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி செல்ல இருக்கின்றார்கள்.
19 ஆம் தேதி  கதிர்காமம் சென்றவுடன் அங்கு தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஊவா மற்றும் தென்மாகாண உதவி பணிப்பாளர்கள் இந்த அணியினரை வரவேற்கவிருக்கின்றார்கள்.
கதிர்காமம்  வெல்வூட் பயிற்சி நிலையத்தில் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற இருக்கின்றன.

கதிர்காம கந்தனை நோக்கிய வரலாற்று ரீதியான முதலாவது கன்னிப் பாதயாத்திரை சிறக்க வாழ்த்துவோம்.

விபுலமாமணி  வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours