இலங்கையில்
கல்விமுறைமை எப்படி அமையவேண்டும்? இனநல்லிணக்கம் தேசியநல்லிணக்கம் எவ்வாறு
அமையவேண்டும்? என்பதை இற்றைக்கு 100வருடங்களுக்கு முன்பே ஓரு தீர்க்கதரிசி
சொல்லியிருந்தார்.
அவர்தான் அகிலம் போற்றும் உலகின்
முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகன் சுவாமி விபுலாநந்த அடிகளார்.
ஆம் உண்மையில் அவர் ஒரு தீர்க்கதரிசி.
உலகின்
முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார்
மகா சமாதி அடைந்து இன்றுடன் (19) எழுபத்தாறு 76 வருடங்களாகின்றது.
அடிகளார் இவ்வவனியில் பிறந்து 131வருடங்களாகின்றன. அவர் பிறந்தது 1892.03.27 இல்.
20ஆம் நூற்றாண்டின் ஈடிணையற்ற பேரறிஞர் சுவாமி விபுலாநந்த அடிகளார் ஆவார்.
அவரது எல்லையற்ற மேதாவிலாசம் காரணமாக உலகின் பல பாகங்களிலும்
அவர் பெயரில் பல அமைப்புகள் இயங்கிவருகின்றன.அவருக்காக பல நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பல ஆய்வரங்குகள் நடாத்தப்பட்டிருக்கின்றன.
அவர் சிவபதமடைந்தது 19.07. 1947இல்.
சுவாமி விபுலானந்த அடிகளார் அன்று சொன்னது:
'
பலமொழிக்கல்வி தேசிய ஒருமைப்பாட்டையும் நாட்டினுள்ளும் நாடுகளிடையேயும்
ஜக்கியத்தையும் உறுதிப்படுத்துகின்றது. சர்வதேச நல்லுறவையும் நன்முறையில்
விருத்திசெய்வதற்குப் பல மொழிகளை ஆண்களும் பெண்களும் கற்றல் வேண்டும்'
என்றார்.
பலதரப்பட்ட பாசைகளைக் கற்பதனால் அறிவு விசாலிக்கும் என்றுகூறிய அவர்
பாடசாலைகளில்
கணிதம் விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கு அப்பால் தொழிற்கல்வியையும் வழங்குவதே
விரிவுக்கல்வியாகும். நல்லதிடகாத்திரமான உடல்நிலை உவப்பான உளவளர்ச்சி
பன்பனவும் கட்டாயமானது என 1941இல் கூறினார்.
அதனால்தான்
1970களில் ஜேவிபி புட்சி அதனைத்தொடர்ந்து பிரதமர் ஸ்ரீமாவோ அம்மையார்
இலங்கைமக்களை நாட்டுப்பற்றுடைய மக்களாக மாற்றவேண்டுமெனின் புதிய
கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டுமென்றெண்ணி க.பொ.த. சா.த பரிட்சை
நிறுத்தப்பட்டு பதிலாக தேசிய கல்விச்சான்றிதழ் எனும் புதிய பரிட்சை முறைமை
அறிமுகப்படுத்தப்பட்டது.
முக்கிய பாடங்களுடன்
தொழிற்கல்வியும் உடற்கல்வியும் கவின்கலைகளும் கட்டாயபாடமாக்கப்பட்டன.
இம்மாற்றம் முழுக்கமுழுக்க விபுலானந்த அடிகளாரின் கல்விச்சிந்தனையில்
எழுந்ததே என்பதை யாரும் மறக்கமுடியாது.
விரிவுக்கல்வியில்
பெரிதும் நாட்டமுள்ள தாகூர் காந்தி பிறந்த நாட்டினில் இன்னும்
விரிவுக்கல்வி நடைமுறையில் இல்லையென்பது இவ்வண் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
அப்படி
இனங்கள் ஒன்றாக நல்லிணக்கத்துடனும் இனசௌயன்யத்துடனிருக்கவேண்டும் என்பதை
அன்றே சிந்தித்தவர் சுவாமிகள். சிங்களமும் இஸ்லாமும் அறபும் சமஸ்கிருதமும்
அவர் தோற்றுவித்த கல்லடி சிவானந்தாவில் கற்பிக்க ஏற்பாடுசெய்தவர்.
காத்தான்குடி முஸ்லிம்மாணவர்களும் பயிலவேண்டுமென்பதற்காக அவர் சிவானந்தாவை
கல்லடியில் அமைத்தார்.
சுவாமியின் சமாதி தினம் சிறப்பாக அமைய இறைவனைப்பிரார்த்திப்போமாக.
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா (M.Ed.) A.D.E..
காரைதீவு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்ற முன்னாள் தலைவர்.
Post A Comment:
0 comments so far,add yours