நூருல் ஹுதா உமர்


சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட செந்நெல் கிராம ஆரம்ப பராமரிப்பு சுகாதாரப் பிரிவினை மக்களின் தேவை கருதியும் சிகிச்சைகளுக்கான ஆளணி மற்றும் முக்கிய வளங்களை பெறுவதற்காகவும் பிரதேச வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கான தேவையை உணர்ந்து தொடர்ந்தேர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக கடந்த 2023.07.28 ஆம் திகதி சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

வைத்தியசாலைகளின் மறுசீரமைப்பு மற்றும் தரமுயர்த்தல் தொடர்பில் நடைபெற்ற இம்முக்கிய கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை சார்பில் பிராந்திய பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ், திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம். மாஹீர் ஆகியோர் கலந்துகொண்டு குறித்த வைத்தியசாலையை பிரதேச வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கான நியாயம் மற்றும் மக்களின் அபிப்பிராயம் தொடர்பில் விரிவாக விளக்கியிருந்தனர்.
 
குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சுகாதார அமைச்சின் தரமுயர்த்தல் குழுவானது செந்நெல் கிராமம் ஆரம்ப பராமரிப்பு சுகாதாரப்பிரிவினை பிரதேச வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கான கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. குறித்த வைத்தியசாலையை பிரதேச வைத்திய சாலையாக தரம் உயர்த்துவதற்காக பெரிதும் ஒத்துழைத்த முன்னாள் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ ஆர் எம் தௌபீக் மற்றும்  தற்போதைய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் மெலிண்டன் கொஸ்தா ஆகியோருக்கும், மாகாண திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி உள்ளிட்ட ஏனைய பிரிவு தலைவர்களுக்கும் விசேடமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் றிபாஸ் தெரிவித்தார்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours