( வி.ரி. சகாதேவராஜா)

சிங்கப்பூரில் பொறியியலாளராக பணியாற்றிய காரைதீவைச் சேர்ந்த இளம் சமூக செயற்பாட்டாளர் அமரர்.சண்முகநாதன் அருள்நாதனின் மறைவையொட்டிய இரங்கல் நிகழ்வு, நேற்று முன்தினம் அவுஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரில் நடைபெற்றது.

அவுஸ்திரேலியாவில் வாழும் காரைதீவு நண்பர்கள் சார்பில் ஒஸ்கார் முன்னாள் தலைவரும், பிரபல சமூக சேவையாளருமான வீரக்குட்டி விவேகானந்தமூர்த்தி இந் நிகழ்வை ஏற்பாடு செய்து தனது இல்லத்தில் நடாத்தினார்.

காரைதீவை பிறப்பிடமாகவும், சிங்கப்பூரை வசிப்பிடமாகவும் கொண்ட அருள்நாதன் ( வயது 40) கடந்த 29ம் திகதியன்று காரைதீவில் மாரடைப்பால் திடீரென காலமானது தெரிந்ததே.

மரணித்து இரு தினங்களில் அவரது ஞாபகார்த்த இரங்கல் நிகழ்வு, அவுஸ்திரேலியா சிட்னியில் நடைபெற்ற போது அங்குள்ள அவரது காரைதீவு நண்பர்கள் பலரும் கலந்து கொண்டு அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அஞ்சலி செலுத்தி, இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் நிகழ்த்தினார்கள்.

கலந்து கொண்ட நண்பர்கள் இரங்கல் உரை நிகழ்த்துகையில்...

இளம் சமூக செயற்பாட்டாளரான பொறியியலாளர் அருள்நாதன் தமிழ் சமுதாயத்தில் ஒரு புரட்சிகர மாற்றத்தினை ஏற்படுத்த கடுமையாக உழைத்தவர். பல்வேறு அமைப்புக்களை உருவாக்கியும் அமைப்புகளில் இணைந்தும் சமுகநலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். தான்பிறந்த மண்ணையும் மக்களையும் நேசித்து, அவர்தம் வாழ்வில் எவ்வழியிலேனும் ஒளியேற்றவும் முழுமையான அபிவிருத்தியைநோக்கி இட்டுச்செல்லவும் அல்லும் பகலும் சிந்தனைசெய்து உழைத்தவர்.   அருளின் அறவழி வாழ்வு போற்றுதற்குரியது. அருளின் தூரநோக்குள்ள சிந்தனையையும் அவரின் சிறந்த செயல்திறனும் தனித்துவமானவை. இந்த வெற்றிடம் மீள்நிரப்ப இயலாது.

இளைய தலைமுறையின் ஒரு பண்பாளனாகவும் பலருக்கு முன்னோடியாகவும் திகழ்ந்தவர் அமரர்.அருள். அருளின் மறைவினால்துயருறும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு 
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
என்றனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours